மதுரை மாவட்டம் சூலபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை என்பவர் கொலை செய்யப்பட்டு உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 2 லட்ச ரூபாய் மதிப்பில் இலவச வீட்டு மனைப் பட்டா, பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையினை தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
இந்த ஊராட்சிக்குட்பட்ட ஏழூர் சப்பரத் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் சுமார் ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் கலந்து கொள்ளும் நிலையில் தற்போது கரோனா ஊரடங்கால் திருவிழா நடத்துவது கேள்விக்குறியானது.
இது குறித்து தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தலைமையில் ஏழு ஊரை சேர்ந்த நாட்டாமைகளோடு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அமைச்சர், “தமிழ்நாடு அரசும் ஆண்டவனும் ஒன்றுதான். இரண்டும் பேரிடர் காலங்களில் காப்பாற்றும் பணியில்தான் இருந்துவருகிறது. கரோனா நெருக்கடியில் விடுபட ஆண்டவனை பிரார்த்தனை செய்ய வேண்டி இத்திருவிழாவை (ஏழூர் திருவிழா) நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதை மாவட்ட நிர்வாகம் ஏற்றுள்ளது.
பாரத பிரதமரே பாராட்டும் விதத்தில் ஏழூர் திருவிழாவை மக்கள் விருப்பப்படியே பாதுகாப்போடு மாவட்ட நிர்வாகம் சிறப்பாக நடத்த உதவும்“ என்றார்.
திருவிழாக் காலங்களில் கரோனா அதிக அளவில் பரவ வாய்ப்புள்ளதால் முறையான வழிமுறைகளை கடைபிடிக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பாட்டும் நானே பாடலும் நானே' - ஆவணியில் அவன் புரட்டாசியில் அவள்