மதுரை: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.கே.நகர் காலனி அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (25). இவரது மனைவி கார்த்திகா(23). இவர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு நாக்கு வளர்ச்சி இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால் கடந்த ஆண்டு நாக்கில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
ஓராண்டு கழித்து மீண்டும் நாக்கில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் மீண்டும் நேற்று (நவ. 23) அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுவனுக்கு நாக்கிற்குப் பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதுகுறித்து அதிர்ச்சியடைந்து மருத்துவர்களிடம் கேட்டபோது மீண்டும் நாக்கில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இது குறித்து குழந்தையின் தந்தை மதுரை அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஒரு வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சையை மாற்றியதாக எழுந்த புகாரை அடுத்து சைல்டுலைன் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் அளித்த விளக்கத்தில், “குழந்தையின் கீழ்த்தாடையோடு நாக்கு ஒட்டி இருந்ததால் மீண்டும் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் பிறப்புறுப்பு பகுதியில் சற்றே வீக்கமும் காணப்பட்டதால் சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆகையால் ஒரே மயக்கமருந்தில் இரண்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது குழந்தை மிக நலமாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகளுடன் தொடர்பு? சென்னையில் 3 பேரிடம் விசாரணை