மதுரை: அறிவுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளை சிறு சிறு விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களிடம் நிறைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். உலக மனநல நாளில் இது போன்ற உறுதியை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மனநல வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அறிவுத்திறன் குறைபாடுடைய குழந்தைகளின் மேம்பாட்டிற்காக இயங்கி வரும் பெத்சான் சிறப்புப் பள்ளி சார்பாக மதுரை சொக்கிகுளம் அருகேயுள்ள தனியார் விடுதியில், உலக மனநல நாளான இன்று (அக்.10) அந்தக் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் கேரம், வண்ணம் தீட்டுதல் மற்றும் பாச்சி பால் (Bocce Ball) ஆகிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன.
இந்த விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு மட்டுமன்றி, விளையாட்டில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதுகுறித்து பெத்சான் பள்ளி நிறுவனர் ஜெயபால் கூறுகையில், “மதுரை மாநகரில் கடந்த 19 ஆண்டுகளாக உலக மனநல நாளை பெத்சான் சிறப்புப் பள்ளி, ஜேசி ரெஸிடெண்ஸி, ரவுண்ட் டேபிள், லயன்ஸ் கிளப் மற்றும் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து சிறப்புக் குழந்தைகளோடு கொண்டாடி வருகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 20 சிறப்புப் பள்ளிகளில் இருந்து தலா 6 குழந்தைகள் வீதம் பங்கேற்றுள்ளனர். அவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 8ல் இருந்து 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வண்ணம் தீட்டுதல், கேரம் என இரண்டு போட்டிகளும், 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாச்சி பால் போட்டியும் நடத்தப்பட்டன.
இதுபோன்ற விளையாட்டுகளால் குழந்தைகளின் அறிவுத்திறனும், கவனமும் மேம்படும். மேலும் கண், கை ஒருங்கிணைப்பு சிறப்பாக நிகழ்வதோடு, கற்றல் திறனும் அதிகரிக்கும். சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறக்கூடிய பாச்சி விளையாட்டிலும் போட்டிகள் நடத்துகிறோம். இந்தப் போட்டிகளில் அக்குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சியோடு பங்கேற்பதை பார்க்கும்போதே பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களாகிய எங்களுக்கும் மிகுந்த உற்சாகம் ஏற்படுகிறது.
மாணவ, மாணவியருக்கு புதிய அனுபவத்தை மட்டுமின்றி, சக மாணவர்களோடு கலந்து பழகி, நட்புணர்வுடன் அன்பைப் பரிமாறிக் கொள்வதற்கான நல்ல வாய்ப்பாகவும் இது அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத்தியலை அறிமுகப்படுத்தி அதன் அடிப்படையில் அந்த ஆண்டு முழுவதும் இயங்குவதை வழக்கமாக்கி உள்ளோம்.
அந்த வகையில் இந்த ஆண்டு, ‘அங்கீகரிப்போம்... அன்பு காட்டுவோம்...’ என்பதை முழக்கமாக்கி இருக்கிறோம். அறிவுசார் குறையுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளை நம் சமூகத்தில் அங்கீகரித்து, அவர்களிடத்தில் அன்பு செய்ய வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்” என்றார்.
இதையும் படிங்க: வந்தே பாரத் ரயில்களில் எகனாமிக் வகுப்பு பெட்டிகளை இணைக்க பயணிகள் கோரிக்கை!