மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனூரை அடுத்த பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லெட்சுமி. அப்பெண்ணிடம் அதே ஊரைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் ஏமாற்றி ரூ.5 லட்சம் கடனாக வாங்கிவிட்டு பணத்தை திரும்பத் தராமல் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லெட்சுமி உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தில் 7 முறை புகார் கொடுத்துள்ளார். லெட்சுமி, காவல்துறையினரிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றம் நிலவியது. பின்னர், அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அப்பெண்ணை தடுத்து நிறுத்தி, தண்ணீர் ஊற்றி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பலத்த பாதுகாப்பிற்கு இடையே பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற தொடர் அசம்பாவித நடவடிக்கையை தடுக்க நெல்லை போன்று அதிரடி அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: டெட்டனேட்டர்களைப் பயன்படுத்தி பாறைகளை உடைக்க முயற்சி!