மதுரை: இங்கிலாந்திலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் (University of Westminister) பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு நீர்நிலைகளின் அமைப்பு முறை, சட்டம், தொழில்நுட்பம், முரண்பாடுகள் (Law, Technology and Water Conflicts in Developing Societies, A Case Study of Tank Systems in Tamil Nadu) குறித்து இரா. சீனிவாசன் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
குஜராத் ஆனந்திலுள்ள கிராமிய மேலாண்மை கல்வி நிறுவனத்திலும் (Institute of Rural Management Anand) பயின்றவர். டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரதான் (PRADAN) என்ற நிறுவனத்தில் தற்போது பணியாற்றிவருகிறார்.
இவர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில், "ஐபிசிசி (IPCC) என்ற பன்னாட்டு அரசுகளுக்கான காலநிலை மாற்ற ஆய்வறிஞர் குழு அண்மையில் தங்களின் 6ஆவது அறிக்கையை கடந்த மாதம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உலக காலநிலை மாற்றம் குறித்து, செயல்படுவதற்கான 'காலம் கடந்துவிட்டது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் அரசுகள் செய்வதற்கான வேலைகள் நிறைய உள்ளன என்பதை முக்கிய குறிப்பாகக் கொண்டு அதனை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக இந்தியாவைப் போன்ற நாடுகளுக்கு உள்ள பாதிப்புகள் குறித்தும், வேளாண்மை, குடிநீர் ஆகியவற்றைப் பற்றியும் விரிவாக அந்த அறிக்கை கூறுகிறது.
மழை, காற்று, வெப்பம், கடல்நீர் மட்டம் ஆகியவற்றின் மூலமாக இந்தியாவும் குறிப்பாக தமிழ்நாடும் பாதிக்கப்படவிருப்பதை நாம் அறிந்துகொள்ளலாம். அதில், மழைப்பொழிவு குறித்து கூறும்போது, மொத்த மழை அளவு மாறுபடாவிட்டாலும், பொழியும் நேரம், வறண்ட நாள்கள் அதிகமாகும், இடைவெளியில் மாற்றம் ஏற்படும் எனவும், பெய்ய வேண்டிய நேரத்தில் பொய்த்தும், எதிர்பாராத நேரத்தில் பெருமழையும் என நிச்சயமற்ற நிலையை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசின் காலநிலை அளவீட்டுத் துறை (INDIA METEOROLOGICAL DEPARTMENT) பெய்யும் மழைப்பொழிவு மாற்றம், அளவு வேறுபாடு குறித்து ஒரு விரிவான அறிக்கையை ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு குறித்த அறிக்கையும் அதில் ஒன்று. அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு குறிப்பாக மதுரைக்கும் மழைப்பொழிவில் பாதிப்பு உண்டு என்பது தெளிவாகியுள்ளது.
ஆனால் மதுரையை மட்டும் தனிப்பட்ட வகையில் அச்சுறுத்தும் அளவிற்கு ஏதும் இல்லை. காரணம், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படுமோ அதேபோன்ற பருவநிலை மாற்றத்திற்கான விளைவுகளே ஏற்படும். இதன் காரணமாக உழவர்களுக்குப் பெரும் இழப்பு ஏற்படுவதற்கான சூழல் உருவாகும்.
மதுரையைப் பொறுத்தவரை வனப்பகுதிகள் மிகவும் குறைவு. மொத்த மதுரையின் 3,741 ச.கி. மீட்டரில் வனப்பகுதி 13 விழுக்காடுதான். இருப்பதை தக்கவைக்கலாமே ஒழிய புதிய வனங்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு அல்லது இயலாது என்பதே உண்மை.
அடுத்ததாக இந்த மழைப்பொழிவின் மாறுபட்டை சரிசெய்வதற்கு நீண்ட கால செயல்பாட்டில் இறங்க வேண்டும். ஏராளமான எண்ணிக்கையில் மரங்கள் நடுவது மட்டுமில்லாமல், சுற்றுச்சூழல் மேம்பாட்டில் புதிய அணுகுமுறைகளைக் கையாள வேண்டும். இவையெல்லாம் இப்போதைக்கு உடனடியாக நடைபெறும் என்பது சாத்தியமில்லை.
ஆனால் குறைந்தபட்சம் பெய்யக்கூடிய மழையைப் பிடித்து தேக்கிவைப்பதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். அதிலும் உள்ள சிக்கல் என்னவென்றால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் 1950-60ஆம் ஆண்டுகளில் இருந்த ஏரி, கண்மாய்ப் பாசனத்தைவிட தற்போது பாதியாகக் குறைந்துள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நிச்சயமற்ற மழைப்பொழிவை ஈடுசெய்யக்கூடியவை நீர்நிலைகளே.
மதுரை மாவட்டத்தில் உள்ள நிலங்களில் 23 முதல் 36 விழுக்காடு வரை மட்டுமே பயிர் செய்யக்கூடிய நிலங்களாக உள்ளன. காடுகள், ஊர்கள், சாலைகள், குன்றுகள், இவை போக எஞ்சியுள்ளவை தரிசுகளாக வீணாகக் கிடக்கின்றன என்பதுதான் இதன் பொருள்.
பாசனம் பெறும் நிலங்களின் பரப்பு கடந்த பத்து ஆண்டு புள்ளிவிவரப்படி அதிகபட்சமாக ஒரு லட்சத்து 43 ஆயிரம் ஹெக்டேராகவும் குறைந்தபட்சமாக 86 ஆயிரம் ஹெக்டேராகவும் உள்ளன.
எனவே, குறைந்தபட்சம் தற்போது சாகுபடியில் உள்ள நிலங்களைத் தக்கவைப்பதற்கான கொள்கைத் திட்டங்களையாவது அரசு தயாரித்து முன்வைக்க வேண்டும். அவற்றைத் தக்கவைக்க வேண்டுமானால் ஏரி, குளங்களைச் சரியான வகையில் சீரமைத்து அவற்றைப் பாதுகாப்பதுதான் முதன்மைச் செயல்திட்டமாக இருக்க முடியும். இதுவும் மதுரைக்கு மட்டுமே உரிய பிரச்சினை அல்ல; தமிழ்நாடு முழுமைக்குமானது.
1980ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நீர்நிலைகள் மூலம் பாசனம் பெற்ற பரப்பில் 28 விழுக்காடு தற்சமயம் இல்லை. இதன் பொருள் என்னவென்றால், ஊராட்சி, நீர் பாசனத் துறைகள் தொடர்ந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் செலவழித்தும்கூட இருக்கும் பாசன வசதிகளைக் காக்க முடியாமல் அழிக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றின் அழிவுக்கு ஆக்கிரமிப்பு உள்ளிட்ட வகையிலும் காரணங்களை நாம் பட்டியலிட முடியும். இதனைச் சரிசெய்வதற்கான முயற்சியின் மூலமாகப் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முதல் அடியைத் தொடங்கிவைக்கலாம்.
வைகை ஆற்றைப் பொறுத்தவரை அதன் நிர்வாகம் பொதுப்பணித் துறை என்ற ஒற்றை அலகின்கீழ்தான் எப்போதும் இருந்தது, இப்போதும் உள்ளது. வைகை ஆற்றின் திறன் கடந்த 100 ஆண்டுகளில் - குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்ட நாளிலிருந்து குறைந்து கொண்டேதான் உள்ளது.
கிளை வாய்க்கால்கள் மூலமாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்கள் பாசனம் பெற்றுவந்தன. ஆனால் கடந்த 115 ஆண்டுகளில் வைகை ஆற்றைச் சார்ந்த நீர்நிலைகளின் செயல் திறன் 75 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாகக் குறைந்துவிட்டது.
இதன் பொருள் என்னவென்றால், கடந்த 110 ஆண்டுகளாக மதுரைக்குக் கிழக்கே சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகையைச் சார்ந்து இருக்கக்கூடிய கண்மாய்கள் நிரம்பும் நிலை (Dependability) தொடர்ந்து குறைந்துவருகிறது.
• 1895-க்கு முன்பு வரை 100-க்கு 75 ஆண்டுகள் நீர் நிரம்பும் என்பது முல்லைப் பெரியாறு அணை வருவதற்கு முன்பிருந்த நிலை.
• முல்லைப் பெரியாறு செயலுக்கு வந்து வைகை அணை உருவான வரை (1895-1959) பின்னர் 55 ஆண்டுகளாகக் குறைந்தது.
• வைகை அணை கட்டப்பட்டு அது நவீனப்படுத்தப்பட்ட 2010ஆம் ஆண்டு வரை 20 விழுக்காடாகக் குறைந்துவிட்டது.
இதுவும் ஒற்றை நிர்வாகத்தால் ஏற்பட்ட விளைவுதான். பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில்தான் வைகை ஆறு இருந்துவருகிறது அப்படியிருந்தும் இந்த விபரீதம் நடந்துள்ளது. காலநிலை மாற்றத்தின் உலகளாவிய தாக்கம் மதுரைக்கு மட்டுமான தனிப்பட்டதொரு அச்சுறுத்தல் கிடையாது.
கடந்த சில ஆண்டுகளில், ஆண்டுதோறும் பொழிகின்ற சராசரி மழையில் மதுரைக்கு 2 லிருந்து 3 விழுக்காடு குறைந்து உள்ளது உண்மையே. மொத்த மழை அளவைத் தவிர்த்து மழை பொழியும் நாள்கள், தீவிரத் தன்மை, பருவத்தில் பெய்யும் மழைஅளவின் வேறுபாடு, வறண்ட நாட்கள் இவை அனைத்தும் இணைந்துதான் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
எனவே, மதுரையைக் காட்டிலும் கடுமையாகப் பாதிக்கக்கூடிய வேறு சில மாவட்டங்களும் உள்ளன. வறண்ட நாள்கள் பெருமளவு அதிகரிக்கக்கூடிய பெரம்பலூர், தருமபுரி போன்ற மாவட்டங்களும் உள்ளன. அதேபோன்று மழைப்பொழிவில் மிகுந்த வேறுபாடு உள்ள மாவட்டங்களும் உள்ளன. அந்த மாவட்டங்களுக்குச் சொல்லக்கூடிய அதே தீர்வுகள்தான் மதுரைக்கும் பொருந்தும்" என்றார்.
இந்திய புவி அறிவியல் துறை வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி அண்மையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. காலநிலை மாற்றத்திற்கு நீர்நிலை மேம்பாடு மட்டுமே ஒரே தீர்வாக உள்ள நிலையில், அதனைப் போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் நீரியல் அறிஞர் இரா. சீனிவாசன் நேர்காணலின் மையக் கருத்து.
இதையும் படிங்க: காலநிலை மாற்றம் இயக்கத்தைத் தொடங்க தீர்மானம் - சுற்றுச்சூழல் துறை