மதுரை: தமிழ்நாடு அரசியலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தாக்கம் என்பது, கட்சிகளின் ஆட்சியைத் தீர்மானிக்கும் அளவிற்கு மிக செல்வாக்கு மிக்கதாகும். பெரியாரை முன்னிறுத்திய அரசியல் எந்தளவிற்கு முதன்மையானதோ அதற்கு சற்றும் குறைவில்லாதது தேவர் திருமகனார் என்றழைக்கப்படுகின்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் அரசியல். பெரியார் இறப்பதற்கு 10ஆண்டுகளுக்கு முன்பே தேவர் மறைந்தாலும், 60 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் அவரை முன்னிறுத்திய அரசியல் இன்றளவுக்கும் குறைவில்லாத செல்வாக்கைக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
ஒவ்வொரு ஆண்டும் தேவரின் பிறந்த மற்றும் இறந்த நாளான அக்டோபர் 30ஆம் தேதி முக்குலத்தைச்சேர்ந்த சாதியரால் தேவர் குருபூஜையாக வெகு விமரிசையோடு கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன்னில் அவர் பிறந்தாலும் மதுரை திருநகரில்தான் அவரது இறப்பு நிகழ்ந்தது. இதனை முன்னிட்டு மதுரை, கோரிப்பாளையம் பகுதியில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்ட தேவரின் சிலை, பசும்பொன்னுக்கு இணையான முக்கியத்துவத்தைப் பெற்றுத்திகழ்கிறது.
பசும்பொன்னுக்குச்செல்கின்ற அரசியல் தலைவர்கள் எவராயினும், மதுரையிலுள்ள தேவரின் சிலைக்கும் மாலையணிவித்து மரியாதை செய்கின்ற மரபு தவிர்க்க இயலாத ஒரு சடங்காக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா, தேவர் திருமகனாருக்கு, தனது கட்சியின் சார்பாக ரூ.3.5 கோடி மதிப்புள்ள 13 கிலோ எடை கொண்ட தங்கக்கவசத்தை காணிக்கையாக வழங்கினார்.
அப்போது அதிமுகவின் பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், பசும்பொன் தேவர் நினைவாலயப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் ஆகியோர் தங்கக் கவசப்பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இந்தக் கவசம் மதுரை அண்ணா நகரிலுள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியிலுள்ள கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜைக்கு சில நாட்கள் முன்பாக, தங்கக் கவசப்பொறுப்பாளர்கள் வருகை தந்து மேலாளர் முன்னிலையில் கையப்பமிட்டு பெற்றுச்செல்வது நடைமுறை. அதேபோன்று விழா நிகழ்வு முடிவடைந்தவுடன் மீண்டும் அதேபோன்று ஒப்படைப்புச்செய்து வருகின்றனர்.
தற்போது அதிமுக ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி என பிளவுபட்டுள்ள சூழலில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் அதிமுகவின் பொருளாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இரண்டு தரப்பினரும் வங்கியை அணுகி தேவரின் தங்கக்கவசத்தை ஒப்படைக்கக்கோரி கடிதம் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து திண்டுக்கல் சீனிவாசன் தாக்கல் செய்துள்ள வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தற்போது நிலுவையில் உள்ள நிலையில், அக்டோபர் 26ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி மாநில குழுவின் முன்னாள் தலைவர் நவமணி கூறுகையில், 'தேவரைப் பொறுத்தவரை கையிலோ கழுத்திலோ குண்டு மணி அளவுக்குக்கூட தங்கம் அணியாமல் ஒரு சித்தராகவே வாழ்ந்தவர். அவருக்கு தங்கக் கவசம் அணிவிக்க அதிமுக-வினர் முன் வந்தது, முக்குலத்தோர் சாதி வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டுதான்.
பொதுவாக கோயில்களில் இறைவனுக்கு காணிக்கை செலுத்தினால் அந்தக்கோயில்களுக்கே அது சொந்தமாக்கப்படும். ஆனால், தேவர் தங்கக்கவசத்தைப் பொறுத்தவரை அதிமுகவில் உட்கட்சி குழப்பம் ஏற்படும்பொதெல்லாம் இதுபோன்று நிகழ்வது வேதனைக்குரியது.
கடந்த முறை இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காரணத்தால் இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டன. தற்போது இதில் இரண்டு மாவட்ட அதிமுக மாவட்டச்செயலாளர்கள் தலையிட்டுள்ளனர்' என்றார்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவருக்கு 60ஆவது குருபூஜை மற்றும் 115ஆவது ஜெயந்தி விழா வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேவருக்கு அணிவிக்கப்படவுள்ள தங்கக் கவசம் குறித்த சிக்கல் வலுவாக எழுந்துள்ளது. தற்போது உயர் நீதிமன்றத்திலும் வழக்கு உள்ள காரணத்தால், தீர்ப்பைப் பொறுத்து தங்கக்கவசம் எந்தத் தரப்பிடம் ஒப்படைக்கப்படும் என்பது தெரியவரும்.
இதையும் படிங்க: இரட்டை குழந்தை விவகாரம்... நாளை மாலை அறிக்கை... மா.சுப்பிரமணியன் தகவல்..