மதுரை: தமிழ்நாட்டில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக்கோரி எழுத்தாளர் எஸ். காமராஜ், மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தொல்லியல்துறை தரப்பில் டெல்லியிலிருந்து நம்பிராஜன், அஜய் யாதவ் ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராகினர்.
தொல்லியல் துறை வாதம்
தற்போது, 41 பணியிடங்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 7 இடங்கள் கல்வெட்டு ஆய்வாளர் பணியிடங்கள் எனவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள் தொல்லியல் துறை வெளியிட்ட தரவுகளோடு ஒப்பிடுகையில், தமிழ் மொழி கல்வெட்டுக்கள் குறித்த விவரங்கள் குறைவாக குறிப்பிடப்படுவது போல் தெரிகிறது. அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை? என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து சென்னையில் இருக்கும் கிளை அலுவலகத்தின் பெயர் என்ன? என்ற நீதிபதிகளின் கேள்விக்கு தொல்லியல்துறை தரப்பில், திராவிடன் கிளை அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது.
நீதிபதிகள் கேள்வி
அதற்கு நீதிபதிகள், அதிக கல்வெட்டுக்களை கொண்ட தமிழ் மொழி திராவிட மொழியாக கருதப்படுகையில், சமஸ்கிருதம் இந்தோ-ஆரிய மொழியாகத்தானே அடையாளப்படுத்தப்பட வேண்டும்? என கேள்வி எழுப்பினர். தமிழ் கல்வெட்டுக்களை கண்டறிந்து, தமிழை பெருமைபடுத்தியவர்கள் பிரிட்டிஷ்காரர்களே.
தொல்லியல்துறையில் திறமையானவர்களை நியமித்து, அனைத்து பணியிடங்களையும் நிரப்பினால் பணிகள் சிறப்பாக நடைபெறும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், மொழி வாரியாக கல்வெட்டுக்களின் எண்ணிக்கை, நிபுணர்களின் எண்ணிக்கை, காலிப் பணியிடங்களின் விவரங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை தீர்ப்பிற்காக ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மதுரை அருகே தூய தமிழ் பெயர்களுடன் 17ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு