மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் அன்புநிதி கடந்த 2019ஆம் ஆண்டில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ” மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஏராளமான வரம்பு மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் உள்ளன. முறையாக விதிகளை பின்பற்றாமல் இந்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டட பணிகள் முடிவுற்றதாக மாநகராட்சி தரப்பில் சான்று அளிக்கப்பட்டது.
இந்த சான்றின் அடிப்படையில் வரம்பு மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளது. எனவே, மாநகராட்சி பகுதியில் வரம்பு மீறிய கட்டடங்களுக்கு பணி முடிவு சான்றிதழ் வழங்கிய மாநகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ் சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மதுரை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் பணியாற்றிய அலுவலர்கள் யார் யார் ? அவர்கள் என்ன பணியில், இருந்தனர் தற்போது எங்கு பணியில் உள்ளனர் என்பது குறித்த விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.