மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டின் அரிய வகை விலங்கான தேவாங்கு கரூர், திண்டுக்கல், திருச்சி ஆகிய பகுதிகளில் அதிகப்படியாக காணப்படுகிறது. தற்போது வனப்பகுதிகளில் மரங்கள் குறைவாக இருப்பதால் தேவாங்கு வனப்பகுதியில் வாழ முடியாமல் அழிந்து வரும் சூழல் ஏற்படுகிறது.
மேலும் வன விலங்குகளை பாதுகாக்க வனத்துறை வகுத்துள்ள விதிமுறைகள் படி, வன விலங்கான தேவாங்கை பாதுகாக்க வேண்டும். எனவே தேவாங்கை பாதுகாக்க திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் மாநிலத்தில் உள்ள இதர பகுதிகளில் சரணாலயம் அமைக்க கோரி உயர் அலுவலர்களுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மனு மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே அரிய வகை வன விலங்கான தேவாங்கை பாதுகாக்க திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் இதர பகுதிகளில் சரணாலயம் அமைக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவானது நீதிபதிகள் எம். எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.