மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர்களின் குடும்பத்தார், தங்கள் பிள்ளைகளுக்கு நேற்று (மே.23) ’ஸ்பைஸ் ஜெட்’ விமானத்தை வாடகைக்கு எடுத்து 7:00 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் மேலே விமானம் பறந்தபோது நடுவானில் திருமணம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
கரோனா நெறிமுறைகளை துச்சமாகக் கருதி திருமணம்...
இந்த விமானத்தினுள் இருந்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இதில், விமானத்திற்குள் பயணித்த உறவினர்கள் முகக் கவசம் இன்றியும், சமூக இடைவெளியை முற்றிலுமான மறந்தும் கும்பலாக சேர்ந்துள்ள வீடியோ, காண்போரை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக, நடுவானில் நடைபெற்ற திருமணம் குறித்து தங்களுக்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், விசாரணை முடியும் வரை விமானத்தில் பயணித்த ஊழியர்கள் அனைவரும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றாத சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது புகார் அளிக்குமாறும் விமான நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.