மதுரை விரகனூர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "தேவர் நினைவிடம் என்பது ஆலயம் போன்றது. அந்த இடத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளது.
தெய்வீக வழிபாட்டில் நம்பிக்கை உள்ளதோ இல்லையோ எந்தத் தலைவரும் பசும்பொன்னால் அவமரியாதையாக நடந்தது இல்லை. திமுக தலைவர் ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் வழங்கப்பட்ட விபூதியை சர்வ சாதாரணமாக கீழே கொட்டுகிற காட்சி வெளியாகியுள்ளது.
ஸ்டாலின் இறைவழிபாட்டில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். இதேபோல ஸ்டாலின் ஸ்ரீரங்கத்திலும் உதாசீனப்படுத்தினார். குங்குமத்தை அப்புறப்படுத்தி உதாசீனப்படுத்தியதைப்போல இப்போதும் அப்படி நடந்திருக்கிறது. விருப்பம் இல்லையென்றால் வழிபாடு செய்துவிட்டு வந்திருக்கலாம். பெரியார்கூட அடிகளார் வழங்கிய திருநீறை மரியாதை நிமித்தமாக அணிந்து கொண்டுள்ளார்.
ஸ்டாலின் பசும்பொன்னில் நிகழ்த்திய சம்பவம் மனத்திற்கு மிகுந்த வேதனையளிக்கிறது. ஸ்டாலின் மன்னிப்புக்கேட்பார் என நம்புகிறேன். அது ஒரு கொடுமை எனக் கூறுவேன். அது இனி நிகழாத வண்ணம் மற்ற தலைவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். உரிய மரியாதை அளிக்காதவர்கள் அந்த இடத்திற்குப் போக வேண்டாம்.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றிபெற்று ஆட்சியில் பங்கு பெற வாய்ப்புள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர்கள்தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை தேர்தலில் மதவெறி கூட்டணியை முறியடிப்போம் -மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு!