மதுரை: மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து சட்டப்பேரவை பொது கணக்குகள் குழுத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் அரசு மகளிர் விடுதிகள், கலைஞர் நினைவு நூலகம், மதுரை-தொண்டி சந்திப்பு மேம்பாலம் ஆகியப் பணிகளை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வேல்முருகன், சிந்தனைச்செல்வன், ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சட்டப்பேரவை பொது கணக்குகள் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் திட்டங்கள் செயல்படுத்தியது குறித்து மத்திய தணிக்கைக் குழு அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிவிக்கையில் கடந்த 2018 - 19ஆம் ஆண்டில் மருந்துகள் தேவையில்லாமல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.17 கோடி அளவிற்கு மருந்துகள் வீணாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதை மத்திய தணிக்கைக் குழு சுட்டிக்காட்டி உள்ளது. திட்டங்களில் எந்தவொரு தவறுகளும் நடக்கக்கூடாது என்பதற்காக ஆய்வு செய்து வருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: போக்குவரத்துத்துறை அமைச்சர் மாற்றம்: காரணம் இதுதானா?