நெல்லை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், வக்போர்டு உறுப்பினருமான கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு வக்போர்டில் 11 உறுப்பினர்கள் இருந்தனர். வக்போர்டில் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும்.
அன்வர் ராஜாவால் ஏற்பட்ட காலி இடத்துக்கு மற்றொரு எம்பியை நியமித்தால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்நிலையில், வக்போர்டு உறுப்பினராக இருந்த மூத்த வழக்கறிஞர் சிராஜூதீன் ராஜினாமா செய்துள்ளார். இதனால் தற்போது வக்போர்டில் 2 உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இந்த இடங்களில் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, மாநிலங்களவை உறுப்பினர் முகமதுஜான் ஆகியோரை நியமிக்கலாம். அதற்கு நடவடிக்கை எடுக்காமல் வக்போர்டு நிர்வாகக்குழுவை கலைத்து, வாக்போர்டுக்கு நிர்வாக அலுவலரை நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும், இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நிலுவையில் இருந்த நிலையில் வக்போர்டு நிர்வாக அலுவலராக சித்திக் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்போர்டில் தற்காலிக ஏற்பாடாக நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை திங்கட்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.