மதுரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது வீட்டின் அருகேயுள்ள பெண்ணின் பிரசவத்திற்காக, சேவை மனப்பான்மையுடன் மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு அவசரம் கருதி அழைத்துச் சென்றுவிட்டு திரும்பியுள்ளார்.
வீட்டுக்குத் திரும்பிவரும் வழியில், மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் ஆட்டோவை மறித்த மதுரை மாநகர காவலர்கள், ரூ. 500 அபராதத்திற்கான ரசீதை வழங்கியுள்ளனர். இதனால் மனம் நொந்துபோன ஆட்டோ ஓட்டுநர், இதுகுறித்து தானே பேசி வெளியிட்ட காணொலி ஒன்று தற்போது வைரலாகிவருகிறது.
அந்தக் காணொலியில், "சேவை மனப்பான்மையுடன் பிரசவத்திற்காக எனது ஆட்டோவில் இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது தவறா..? காவல்துறையினர் கொஞ்சமாவது மனசாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். அவர்களது வீட்டிலும் பெண்கள் உள்ளனர். அவர்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால், எந்த ஆட்டோவாவது வருமா..?
தமிழ்நாடு அரசு கொடுத்த ரூ. 1000 பணத்தையும் அபராதத்திற்காக கொடுத்துவிட்டு, எனது குடும்பத்தாருடன் நான் எதைச் சாப்பிடுவேன். கரோனா வந்து சாவதைக் காட்டிலும், காவல்துறையினரின் கொடுமையால் அது நிகழ்ந்துவிடும்போல் தெரிகிறது.
தயவுசெய்து இதனைக் காணும் மேலதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுங்கள்" என வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது
இதையும் படிங்க... 'மருமகனுக்கு 67 வகை உணவை ஏற்பாடு செய்த மாமியார்' வைரலாகும் காணொலி