திருநெல்வேலியைச் சேர்ந்த உமாமகேஸ்வரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனுவை தாக்கல் செய்தார்.
அதில், "சென்னையில் தவறான வார்த்தைகளில் கேள்விகளை பொதுமக்களிடம் கேட்டு யூடியூப் சேனலில் பதிவிட்டதாக மூன்று நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது யூடியூப் சேனல் தடைசெய்யப்பட்டது. இருந்தபோதும் அவர்களது வீடியோக்கள் பல விதமான சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு உள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் பலர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். 2012ஆவது சர்வேயின்படி இணையதளம் மூலம் மிரட்டுவதில் (கொடுமைப்படுத்துதல்) இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
கரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. குழந்தைகள் அதிகப்படியாக செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குழந்தைகள் அதிகப்படியாக சமூகவலைதளங்கள் உபயோகிக்க வாய்ப்பு உள்ளது. சமூக வலைதளங்களில் ஆபாசம் நிறைந்த படங்கள் வார்த்தைகள் அதிகப்படியாக வருவதால் குழந்தைகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
யூடியூப், பேஸ் புக், வெப் சீரியஸ், செல்ப் கண்டெண்ட் வீடியோ, ஷார்ட் பிலிம்ஸ், பிரான்க் சோ ஆகியவை தணிக்கை செய்யப்படுவதில்லை. யூடியூப், பேஸ்புக், சில சமூகவலைதளங்கள் நேரலை செய்யக்கூடிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. சில அங்கீகரிக்கப்பட்ட செய்தி சேனல்களை தவிர மற்றவர்கள் உண்மைக்குப் புறம்பான விஷயங்களை நேரலை என்று கொடுத்து வருகின்றனர்.
யூடியூபை பல நாடுகள் தடை செய்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தடை செய்துள்ளன. வருமுன் காப்பதே சிறந்தது. எனவே தற்போது இருந்து சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள், கருத்துகள் ஆகியவற்றை தணிக்கை செய்ய வேண்டும்.
சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள், புகைப்படங்கள், வீடியோக்களை கட்டுப்படுத்துதல், கண்காணித்தல், வழிமுறைபடுத்துதல் மற்றும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ள உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் யூடியூப், பேஸ்புக், கூகுள் மற்றும் சமூக வலைதளங்கள் தங்களுக்கான தணிக்கையை தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
புகார்கள் ஏதேனும் வரும் பட்சத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதிகள் யூடியூப், பேஸ்புக், கூகுள் ஆகிய நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:யூ-டியூப் சேனல்களில் உள்ள ஆபாச வீடியோக்களை நீக்க உத்தரவு - சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு