மதுரை: மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக மகத்தான வெற்றி பெறும். தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆழமாக காலூன்றி இருக்கிறது. விக்டோரியா கௌரி நீதிபதியாக அறிவிக்கப்பட்டது மதச்சார்பின்மைக்கு எதிரானது.
ஆகையால், விக்டோரியா கௌரியை திரும்ப பெற வேண்டும் என மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் குடியரசு தலைவருக்கும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் வலியுறுத்தி உள்ளோம். விக்டோரியா கௌரி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை மிக மோசமாக விமர்சனம் செய்தவர். விக்டோரியா கௌரி நீதிபதியாக நியமிக்க தகுதியற்றவர், அவர் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மேலும், கருணாநிதியின் சங்கத் தமிழ் காவியத்தின் அடையாளம் பேனா, பட்டேல் சிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். பேனா நினைவுச் சின்னத்தால் சுற்றுச்சூழல் பாதிக்காது, பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான பிரசாரம் தேவையற்றது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Breaking News: விக்டோரியா கெளரிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி