மதுரை மாநகரின் வரலாற்று புகழ்மிக்க அடையாளங்களில் மீனாட்சி அம்மன் கோயில், திருமலை மன்னரின் அரண்மனை ஆகியவற்றோடு ஏவி மேம்பாலம் அருகே வைகை ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள மைய மண்டபமும் ஒன்றாகும்.
கிபி 17ஆம் நூற்றாண்டில் ராணி மங்கம்மாள் காலத்தில் இந்த மண்டபம் கட்டப்பட்டதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். மழை, வெள்ளம், இடி என அனைத்தையும் தாண்டி ஓரளவுக்கு தாங்கிநின்ற இந்த மைய மண்டபம் அண்மை காலமாக மிகவும் பாழடைந்த ஒன்றாக மாறத்தொடங்கியுள்ளது.
மேலும் இங்கு பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறத் தொடங்கின. வரிசைக்கு ஆறு என 36 தூண்கள் கொண்ட இந்த மண்டபத்தில் 14 தூண்கள் சரிந்து விழுந்ததுடன் ஒரு பக்க மேல் தளமும் நொறுங்கியது.
அதுமட்டுமன்றி எஞ்சியுள்ள தளமும், தூண்களும் சீக்கிரம் விழுவதைப்போன்று காட்சியளித்தன. இந்த மண்டபத்தைப் பாதுகாக்கக்கோரி பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன. போராட்டங்களும் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து கடந்த ஓராண்டுக்கு முன்பே இந்து சமய அறநிலையத் துறை இந்த மண்டபத்தை 43 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணியைத் தொடங்கியது. ஏறக்குறைய ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் 90 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ளன.
இது குறித்து சமூக செயற்பாட்டாளர் அமுதன் கூறுகையில், 'பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்த மைய மண்டபம் மீனாட்சி அம்மனின் தீர்த்தவாரி மண்டபமாக இருந்துவந்தது. ஆகையால் மீண்டும் பழைய முறைப்படி இதனைத் தீர்த்தவாரி மண்டபமாக அறிவித்து மீனாட்சி சொக்கநாதரை எழுந்தருளச் செய்ய வேண்டும்' என்றார்.
ஆன்மிக பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட இந்த மண்டபம் சிதிலமடைந்த காரணத்தால் இங்கு பகல் நேரத்தில் சீட்டு விளையாடுவது, மது குடிப்பது போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெற்ற வண்ணம் இருந்தன. அதனைக் கட்டுப்படுத்துவது காவல் துறையினருக்குப் பெரும் தலைவலியாக இருந்துவந்தது.
மைய மண்டபத்தை இடிபாடுகளிலிருந்து காப்பாற்றுவதற்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்திய வைகை நதி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், 'மதுரையின் முக்கியத்துவம் வாய்ந்த அடையாளங்களில் மைய மண்டபம் ஒன்று. மிகவும் பாழடைந்துகிடந்த இந்த மண்டபத்தை பொதுமக்களின் பங்கேற்புடன் அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று இதனைச் சீரமைக்க தொடர்ந்து வலியுறுத்தினோம். தற்போது அது நிறைவேறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.
மண்டபத்தின் மேலே திசைக்கு ஒன்றாக நான்கு மூலைகளிலும் காளை உருவம் சுதை சிற்பமாக வைக்கப்பட்டுள்ளது. முன்னர் இது கல் சிற்பமாக இருந்து சிதைந்துபோனது. ஒரு தலையில் ஈருடலாக அமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சிற்பம் காண்போரை வியக்கவைக்கும் கலை நேர்த்தி கொண்டதாகும்.
மற்றொரு சமூக செயற்பாட்டாளர் மணிகண்டன் கூறுகையில், 'மீனாட்சி அம்மன் கோயில் சார்ந்த திருவிழாவான அஸ்திர பூஜை இந்த மண்டபத்தில் 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அது காலப்போக்கில் நடைபெறாமல் போய்விட்டது. அதனை மீண்டும் நடத்துவதற்கு மீனாட்சி கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்' என்றார்.
வைகை நதி மக்கள் இயக்கத்தின் மற்றொரு பொறுப்பாளர் அறிவுச்செல்வம் கூறுகையில், "இந்தப் பணியை மிகச் சிறப்பாக மேற்கொண்டதற்காக இந்து சமய அறநிலையத் துறைக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுவாக நதியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள இதுபோன்ற மண்டபங்கள் வெள்ளம் வரும் காலங்களில் நீர்மட்டத்தின் அளவை மக்கள் அறிந்து கொள்வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு வாய்ப்பாகும். இது நமது முன்னோர்களின் அறிவியல் பார்வையைக் காட்டுகிறது.
ஆகையால் இந்த மண்டபம் மீண்டும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுவதைத் தவிர்த்து சரியான முறையில் பயன்படுத்த கோயில் நிர்வாகம் திட்டமிட வேண்டும்" என்கிறார்
மதுரை மக்களின் பல்லாண்டு கோரிக்கை நிறைவேறும் வண்ணமாக வைகை ஆற்று மைய மண்டபம் தற்போது மிக சிறப்பான முறையில் தயாராகி உள்ளது. இதனைப் பாரம்பரிய முறையில் பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.
இதையும் படிங்க... அணில் குஞ்சுகளை கைவிட்ட தாய்: பாலூட்டி வளர்க்கும் மருத்துவர்