மதுரை: 'வைகை எக்ஸ்பிரஸ்' ரயில் மதுரை-சென்னை இடையே பகல் நேர விரைவு ரயிலாக இயக்கப்பட்டுவருகிறது. 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 44 ஆண்டுகளாக இயக்கப்படுவருகிறது. ஒவ்வொரு நாளும் மதுரையிலிருந்து வழக்கமாக காலை 7.05 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.30 மணிக்கு சென்னையை சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 25 நிமிடங்கள். அதேபோன்று சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு மதுரை வந்து சேரும்.
மொத்த பயண நேரம் 7 மணி 35 நிமிடங்கள். இந்த நிலையில் மார்ச் 3ஆம் தேதி மதுரையிலிருந்து காலை 7.05 மணிக்குப் புறப்பட வேண்டிய நேரத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக காலை 7.26 மணிக்குப் புறப்பட்டது. இருப்பினும் சென்னைக்கு சென்றடைய வேண்டிய வழக்கமான நேரமான பிற்பகல் 2.30 மணிக்கு முன்னரே 2.07மணிக்கு சென்றடைந்தது.
அந்த வகையில் மதுரை-சென்னை இடையேயான 497 கி.மீ., தூரத்தை 6 மணி 40 நிமிடங்களில் கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து ரயில்வே ஆர்வலர் அருண்பாண்டியன் தொலைபேசி வாயிலாக ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "இந்திய ரயில்வேயில் இந்த பயண வேகம் வரலாற்று சாதனையாகும். வைகை எக்ஸ்பிரஸ் முன்னதாக தொடங்கப்பட்ட நாளான 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி 7 மணி நேரம் 05 நிமிடங்கள் கடந்து சாதனை படைத்திருந்தது. தற்போது 300 கி.மீ. தூரத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் 25 நிமிட தாமதத்தை சரி செய்து தெற்கு ரயில்வே சாதனை படைத்திருக்கிறது. ரயில்வேயின் அனைத்து துறைளுடைய ஒருங்கிணைப்பின்றி இது சாத்தியமில்லை" என்றார்.
மேலும் வடமாநிலங்களில் சில எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மணிக்கு சராசரியாக 130 கி.மீ. வேகம் நிர்ணயம் செய்யப்பட்டு, இயக்கப்படுகின்றன. அவற்றில் சில நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைவிட முன்னதாக சென்றிருக்கின்றன. சென்னையிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் 7 மணி நேரமும் சென்னையில் இருந்து மைசூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் 497 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி நேரமும் கடக்கின்றன. ஆனால் வைகை எக்பிரஸை விட இந்த ரயில்களில் நிறுத்தங்கள் மிக குறைவாகும். தமிழ்நாட்டில் இயக்கப்படும் ரயில்களோடு ஒப்பிடும்போது வைகை எக்ஸ்பிரஸ் சாதனைக்குரிய தொடர்வண்டியாக தன் பெருமையை இன்றும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: பள்ளி மாணவனின் ரசிகரான டிஜிபி சைலேந்திரபாபு