தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. 71 அடி நீர்த்தேக்க கொள்ளளவு கொண்ட இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீராதாரமாகத் திகழ்கிறது. முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீர், வருசநாடு அருகே உள்ள மூலவைகை ஆகியவற்றிலிருந்து வரும் தண்ணீர் வைகை அணையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக இருக்கிறது.
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த பருவமழையினால் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், வைகை அணையின் நீர் மட்டம் 60 அடியை எட்டியது. இதனையடுத்து ஒருபோக சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் கோரிக்கைவைத்தனர்.
இவர்களது கோரிக்கையை ஏற்று, அணையிலிருந்து செப்டம்பர் 9ஆம் முதல் 120 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதனடிப்படையில், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று நவதானியங்களைத் தூவி தண்ணீரை திறந்துவைத்தார். மதகுப்பகுதியில் அணையின் பிரதான ஏழு கண் பெரிய மதகுகள் திறக்கப்பட்டன.