தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைப்பெற்று முடிந்தது. மதுரையில் நடைபெற்ற வாக்குப்பதிவுக்கு பிறகு அனைத்து வாக்கு இயந்திரங்களும் மதுரை மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று (ஏப்.20) வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குப் பக்கத்திலுள்ள ஆவணங்கள் வைக்கும் அறையில், தாசில்தார் என கூறிக்கொண்டு பெண் ஒருவர் நுழைந்ததாகவும், அவர் சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனையடுத்து மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் சு.வெங்கடேசன், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, நாம் தமிழர் வேட்பாளர் பாண்டியம்மாள் உள்ளிட்ட பலர் மதுரை மருத்துவக் கல்லூரி முன்பாகத் திரண்டனர்.
அப்போது பேசிய சு.வெங்கடேசன், 'மூன்றடுக்குப் பாதுகாப்பில் உள்ள இந்த பாதுகாப்பு மையத்தில் பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமலேயே உள்ளே புகுந்து சில ஆவணங்களை எடுத்துச் சென்று ஜெராக்ஸ் கடையில் நகல் எடுத்துள்ளார். ஏறக்குறைய அந்த அறைக்குள் அவர் இரண்டு மணி நேரம் இருந்துள்ளார்.
அதற்குப் பிறகு காவல்துறை அதிகாரிகளால் அந்த பெண் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். எந்தவித எழுத்துப்பூர்வ அனுமதியின்றி அவர் அந்த அறைக்குள் செல்ல வேண்டிய அவசியம் என்ன? அதற்குரிய சிசிடிவி காட்சிகளை பார்வையிட மாவட்ட ஆட்சியர் அனுமதிக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.