மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சத்திய பிரியா. இவர் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் செவிலியாகப் பணிபுரிந்துவருகிறார். இவர் நேற்று (மே 31) அதிகாலை 2 மணிக்கு மருத்துவமனைக்குப் பணிக்குச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, செல்லூர் பாலம் அருகே அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள், சத்திய பிரியாவின் கழுத்தில் அணிந்திருந்த ஆறு சவரன் தங்கச் செயினைப் பறித்துச் சென்றனர்.
இதையடுத்து, இருசக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த சத்ய பிரியாவின் தலையின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த செல்லூர் காவல் துறையினர், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வுசெய்து அடையாளம் தெரியாத நபர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.