மதுரை: திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தார்.
'ஒன்றியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த தடை விதிக்கவேண்டும்'
அதில் 'நடந்து முடிந்த சட்டப்பேரவைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று, தற்போது அரசு அமைத்துள்ளது. திமுக புதிய அரசாங்கப் பொறுப்பேற்றபின்பு இந்திய அரசை "ஒன்றிய அரசு" என்று கூறிவருகிறது.
ஒன்றியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தவறானது. இந்திய தேசிய இறையாண்மைக்கு எதிரானது ஆகும். மேலும் இதுபோன்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்குப் பின்புலத்தில் ஏதோ பயங்கரவாத சக்தியின் உந்துதல் இருப்பதாக சந்தேகம் எழுகிறது.
மேலும் கடந்த வாரம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தின்போது ஒன்றியம் குறித்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் "இந்தியா யூனியன் கவர்மென்ட்" என்று அழைக்கப்படுவதால், அதை நாங்கள் 'ஒன்றிய அரசு' என்று கூறுகின்றோம். இது ஒன்றும் சமூக விரோத குற்றமில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
இது முற்றிலும் இந்திய இறையாண்மைக்கு எதிரானது. சட்டப்பேரவையை இந்த அரசு தவறாக வழிநடத்தி வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே, தமிழ்நாடு அரசு "ஒன்றியம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தத்தடை விதிக்க வேண்டும். மேலும் இந்திய அரசை இந்தியா அல்லது பாரதம் என்றே குறிப்பிட வேண்டும்' என உத்தரவிடக் கோரி மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
'முதலமைச்சரை வற்புறுத்த முடியாது'
மனுதாரர் தரப்பில்,"இந்திய அரசை இந்தியா அல்லது பாரதம் என்றே அழைக்கவேண்டும். ஒன்றியம் என்று அழைக்கக் கூடாது" என வாதிட்டார்.
இதற்கு நீதிபதிகள் 'கரோனா தடுப்பூசிப் போடுங்கள்' என நீதிமன்றம், அரசு பொது மக்களை வலியுறுத்தி வருகின்றது. ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்வது அல்லது போடாமல் இருப்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை.
எனவே, நீதிமன்றம் இந்தியாவை இந்திய அரசு அல்லது பாரதம் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கும் சட்டப்பேரவையில் இது தான் பேச வேண்டும் என உத்தரவிட முடியாது. ஏனென்றால் இது அவர்களின் தனிப்பட்ட உரிமை' எனக் கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: 'மருத்துவர்கள் நலன் காக்கும் அரசு' - முதலமைச்சர் ஸ்டாலின்