மதுரை: மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள தனியார் அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான வங்கி பரிவர்த்தன அட்டையை 500 மகளிருக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்பட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மகளிருக்கு வழங்கும் டெபிட் கார்டு, மகளிருக்கு வழங்கும் உரிமைக்கான துடுப்புச் சீட்டு. மேல் சாதி கீழ் சாதி, முதலாளி தொழிலாளி என பாகுபாடுகளை விட ஆண், பெண் என்ற பாகுபாடு மோசமானது என பெரியார் கூறியுள்ளார். இதனால்தான் மகளிருக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இது உதவித்தொகை அல்ல, உங்களின் உரிமைத் தொகை. பெரியார் கூறியதுபோல, மகளிர் முற்போக்காக சிந்திக்க வேண்டும். அப்போதுதான் அவர்களது குழந்தைகளும் முற்போக்காக சிந்திக்க முடியும். மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு வீட்டிற்கும், நாட்டிற்கும் மிகப்பெரிய வளர்ச்சிக்கு உதவும் என்பதை நம்புகிறேன்" என கூறினார்.
மருத்துவமனையில் திடீர் ஆய்வு: அவ்விழாவினைத் தொடர்ந்து மதுரை கோரிப்பாளையம் பகுதியில், ஜைகா நிதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், “இந்த மருத்துவமனை கொரோனா பேரிடர் காலத்தால் கட்டுமான பணிகள் தாமதமாகியுள்ளது. அக்டோபர் மாதம் பணிகளை முழுமையாக முடித்து, விரைவில் திறக்கப்படும்" என தெரிவித்தார்.
பாஜக அதிமுக மோதல் குறித்து விமர்சனம்: அதிமுக - பாஜக இடையே நிலவும் உட்கட்சி பூசல் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, "அவர்களுக்குள் சண்டை போடுவதுபோல் நடித்துக் கொள்வார்கள். ஒரு நகைச்சுவை தொலைக்காட்சியைக் கண்டு சிரிப்பதுபோல நாம் அதை கடந்து செல்ல வேண்டும்" என பேசினார்.
காலை இழந்த ஜூடோ வீரருக்கு நிவாரணத் தொகை: கடந்த ஜூலை மாதம் மதுரை கோச்சடை பகுதியில் பயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்பிய ஜூடோ விளையாட்டு வீரர் பருதி விக்னேஸ்வரன் (18) மீது கிரேனில் இருந்து மின் கம்பம் கழன்று விழுந்து படுகாயம் ஏற்பட்டது. அதனை அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்து அவரது கணுக்கால் வரை நீக்கப்பட்டது. காலை இழந்த விளையாட்டு வீரரை நேரில் சந்தித்து, இரண்டு லட்சம் நிவாரணத் தொகை வழங்கினார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வு: மதுரையைச் சுற்றியுள்ள 5 மாவட்டங்களுக்கான சிறார் கூர்நோக்கு இல்லம் மதுரை மாநகரில் செயல்பட்டு வருகிறது. அந்த இல்லத்துக்கு நேற்று இரவு நேரில் சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்குள்ள சிறுவர்களுக்கு வழங்கப்படும் உணவு, உடை போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், அங்குள்ள சமையலறை, படுக்கை அறைகள், கழிப்பறைகள் ஆகியவை சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, அங்குள்ள சிறார்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், கூர்நோக்கு இல்லத்தில் இருக்கும் சிறார்களுக்கு, விடுவிக்கப்படும்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி, குற்றச் செயல்களில் ஈடுபடமால் வாழும் வகையில் வழங்கப்படும் பயிற்சிகள், உளவியல் சார்ந்த பாடங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.