திருச்சி மாவட்டத்தில், நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. திருச்சியில் இதுவரை 5ஆயிரத்திற்கும் மேல் கரோனாவால் பாதிக்கப்பட்டும், 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் தொற்று பாதித்துள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்திய மருத்துவக் கழகத்தின் திருச்சி கிளை, திருச்சி மாவட்டம் முழுவதும் இரண்டு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்திய மருத்துவக் கழகத்தின் திருச்சி கிளையின் பரிந்துரையின்படி, திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும், மதுரையில் நீதிமன்றம் தாமாக முன்வந்து மருத்துவ சிகிச்சையைக் கண்காணிப்பது போல், திருச்சியிலும் கண்காணிக்க வேண்டும். எனவே, திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று சமூகப் பரவலாக ஆகாமல் இருக்க, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து திருச்சி மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரும் மூத்த வழக்கறிஞருமான ராஜகோபால் ஆஜராகி பேசுகையில், ’திருச்சியில் நாளுக்கு நாள் கரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றைத் தடுப்பது குறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் மருத்துவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதிகோரினால், மாவட்ட ஆட்சியர் மருத்துவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார். எனவே, அவசர காலம் கருதி நீதிமன்றம் குறைந்தபட்சம் ஒரு வாரமாவது முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.
இதனையடுத்து நீதிபதிகள் திருச்சி மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். திருச்சியில் கரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் என்ன, தடுப்பு நடவடிக்கைகள் என்ன எடுக்கப்பட்டுள்ளது, அரசு மருத்துவமனையில் உள்ள வசதிகள் என்ன, எத்தனை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, பாதித்தவர்களுக்கு அடிப்படை வசதிகள் என்ன செய்து கொடுக்கப்பட்டுள்ளது, அறிகுறி உள்ளவர்கள் பரிசோதனை செய்தால், அவர்களுக்கு எத்தனை நாளில் பரிசோதனை முடிவு கொடுக்கப்படுகிறது, இதற்காக எத்தனை பரிசோதனை மையங்கள் அரசு தரப்பிலும் தனியார் தரப்பிலும் உள்ளன, கரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களை பாதுகாக்க என்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் வழக்கின் அடுத்த விசாரணையின்போது, திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் திருச்சி மாநகராட்சி ஆணையர் காணொலி காட்சியில் நேரில் ஆஜராகி, தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மரபு மருத்துவங்களுக்கு 10 ஆண்டுகளில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது ? - நீதிமன்றம் கேள்வி !