மதுரை தெற்குவாசல் விளக்குத்தூண் அருகே இயங்கி வரும் பிரபல ஜவுளிக்கடையின் எதிரேவுள்ள கட்டடத்தில் நேற்று நள்ளிரவில் தீ பற்றத் தொடங்கியுள்ளது. பின்னர், அக்கட்டடம் முழுவதும் பரவத் தொடங்கிய தீயால் அப்பகுதி புகை மண்டலமாக மாறியுள்ளது.
இது குறித்து தகவலறிந்த மதுரை நகர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு, தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, அருகிலிருந்து பழைய கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.
இந்த இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்பு வீரர்கள் கிருஷ்ணமூர்த்தி(28), சிவராஜன்(32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயமடைந்த நிலையில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பஞ்சு குடோனில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!