அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரையில் செய்தியாளர் சந்திப்பில், “இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கமல்ஹாசனின் கருத்தை வரவேற்கிறேன். ராஜீவ்காந்தி கொலை குறித்த சீமானின் பேச்சு தேவையற்றது. சீமான் தனது பேச்சை திரும்ப பெற்றுக்கொண்டால் அவருக்கும் நல்லது. எங்களை போன்ற அரசியல்வாதிகளுக்கும் நல்லது என்றார்.
இதையடுத்து செய்தியாளர்கள் அவரிடம் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது பற்றி நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற துணைமுதல்வர் பேசியது குறித்து கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், ”துரோகம் செய்தவர்கள் உடன் நாங்கள் இணைய வாய்ப்பே கிடையாது. ஒரு சில துரோகிகளை நீக்கி விட்டு மற்றவர்கள் அனைவரும் எங்களோடு வந்து இணைவார்கள். சிறையில் இருப்பவர்கள் பேச முடியாத காரணத்தால் வெளியே இருப்பவர்கள் வாய்க்கு வந்தப்படி பேசுகிறார்கள். நிரந்தர சின்னம் பெறுவதற்கு டெல்லியில் அக்டோபர் 17ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. வழக்கம் போல ஈ.பி.எஸ்., ஒ.பி.எஸ்., அதற்கு எதிராக மனு செய்துள்ளனர்.
அதையும் முறியடித்து சின்னத்தை பெற்று தேர்தலில் போட்டியிடுவோம், ஆர்.கே.நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டேன். ஆர்.கே நகர் தேர்தலில் ஒரு சின்னத்திலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி, வேலூர் போன்ற தேர்தல்களில் ஒவ்வொரு சின்னத்திலும் போட்டியிட முடியாது.
ஒரே சின்னம் பெற்று விரைவில் தேர்தலில் போட்டியிடுவேன். பல சின்னங்களில் போட்டியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என்றார்.
இதையும் படிக்க: இப்படியே பேசிக்கொண்டிருந்தால் சீமான் தனிமைப்பட்டு போவார் - அமைச்சர் ஜெயக்குமார்