திருச்சி ஸ்ரீரங்கத்தில் பத்மபிரியா திருமண மண்டபத்தில் 2004ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் நடைபெற்ற தீ விபத்தில் மணமகன் குருராஜன் உள்பட 64 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் மண்டப உரிமையாளர் ராமசாமி, மேலாளர் சடகோபன் உள்பட நான்கு பேருக்கு தண்டனை வழங்கி திருச்சி நீதிமன்றம் 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. அதில் மண்டப உரிமையாளர் ராமசாமிக்கு இரண்டு ஆண்டுகள், சடகோபன், தர்மராஜ் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும், முருகேசனுக்கு ஆறு மாதம் சிறைதண்டனை வழங்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து நான்கு பேரின் சார்பிலும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கிலிருந்து தர்மராஜை விடுதலை செய்தும், மண்டப உரிமையாளர் ராமசாமிக்கு மூன்று மாதம், மேலாளர் சடகோபனுக்கு ஆறு மாதம் சாதாரண சிறைத் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார். முருகேசனுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆறு மாத கடுங்காவல் தண்டனையும் உறுதி செய்தார்.
மண்டப உரிமையாளர் ராமசாமி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக ரூ.40 லட்சம் இழப்பீட்டு தொகையை ஆறு வாரத்தில் வழங்க வேண்டும் என்றும், இப்பணத்தை கீழமை நீதிமன்றம் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.