மதுரை திலகர் திடல் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றுபவர் கவிதா. இவர் கடந்த 21ஆம் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, மதுரை ரயில்வே நிலைய பகுதியில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்க திருநங்கை ஒருவரை அழைத்து விசாரித்தார். அப்போது, திருநங்கை சரளமாக ஆங்கிலத்தில் பேசியதைக் கேட்டு ஆய்வாளர் கவிதா ஆச்சரியமடைந்தார்.
மேலும், நான் எம்பிபிஎஸ் வரை படித்திருக்கிறேன். தனது உடலில் மாற்றம் ஏற்பட்டதால், வீட்டில் இருப்பவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. தனியார் மருத்துவமனையில் பணியாற்றியபோது பணி நீக்கம் செய்யப்பட்டேன். திருநங்கை சான்றிதழ் பெறவும் சிரமமாக உள்ளது. நான் ஒரு திருநங்கை அங்கீகாரம் கிடைக்காத நிலையில், பிச்சையெடுத்து வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ஆய்வாளர் கவிதா, அந்த திருநங்கையிடமிருந்து கல்விச் சான்றிதழ்களை கொண்டு வரச் சொல்லி ஆய்வு செய்தபோது, அவர் கூறிய அனைத்துத் தகவல்களும் உண்மை என தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து, திருநங்கையாய் மாறிய பரமேஸ்வரனுக்கு தேவையான உதவிகளை செய்து தர முயற்சி செய்தார். இந்நிலையில், ஆய்வாளர் கவிதா தனது சொந்த செலவில் திருநங்கை பரமேஸ்வரன் மருத்துவ தொழிலை தொடங்குவதற்கு தேவையான உபகரணங்களை வழங்கியுள்ளார். தற்போது, திலகர் திடல் காவல் நிலையம் அருகிலேயே மருத்துவமனை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
யார் இந்த திருநங்கை?
மதுரை சிம்மக்கல் அருகே தனது பெற்றோருடன் வசித்து வந்தவர் பரமேஸ்வரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மருத்துவம் படிக்க வேண்டும் என கனவோடு, விடா முயற்சியாலும் கடந்த 2013-ஆம் ஆண்டு மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தார். பள்ளிப் பருவத்திலேயே தனக்குள் மாற்றம் நிகழ்ந்ததை அவரால் உணர முடிந்தாலும், அதனை வெளியே எங்கும் பகிர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு படிப்பை நிறைவு செய்த பரமேஸ்வரன், மதுரை கீழவாசல் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் பணிக்குச் சேர்ந்தார். அச்சமயம் பரமேஸ்வரனுக்கு நிகழ்ந்த உடல் ரீதியான மாற்றம், அவரை முழுமையாக திருநங்கையாக தன்னை உணர வைத்தது. இதனை மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியபோது, அவர்கள் ஏற்க மறுத்து, பரமேஸ்வரனை பணி நீக்கம் செய்துள்ளனர்.
சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பரமேஸ்வரனை அரவணைக்க வேண்டிய பெற்றோரும் திருநங்கையாக தனது மகனை பார்க்க சகிக்க முடியாததால் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். குடும்பமும், இந்தச் சமூகமும் ஏற்க மறுத்த பரமேஸ்வரன் மருத்துவப் படிப்பு முடித்தும் பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
திருநங்கைகள் குறித்த புரிதல் நமது சமூகத்தில் எந்தளவில் இருக்கிறது என்பதற்கு பரமேஸ்வரன் ஓர் எடுத்துக்காட்டாகவும், காவல்துறை பொதுமக்களின் நண்பனாக எவ்வாறு திகழ வேண்டும் என்பதற்கு ஆய்வாளர் கவிதா மற்றொரு எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றனர். சரியான நேரத்தில் மதுரை காவல்துறை மேற்கொண்ட இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: அனுமதி பெறாத வாடகை கார் சேவைக்கு கடிவாளம் போடுமா தமிழ்நாடு அரசு?