இராஜபாளையம் ரயில் பயனாளர் என்ற அமைப்பு 144 ஊரடங்கு காலம் முடிவடைந்தவுடன், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தமிழ்நாடு முழுவதும் 432 ரயில் பயணிகளிடமும், பொதுமக்களிடமும் கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் ஒன்பது வகையான கேள்விகள் கேட்கப்பட்டன.
அவை, ஊரடங்கு தடைக்காலம் முடிந்தவுடன் ரயில் பயணம் மேற்கொள்வது குறித்து, 'சூழலைப் பொறுத்து பயணிப்பேன்' என 58.1 விழுக்காட்டினரும், 'சில மாதங்களுக்குப் பயணம் செய்யமாட்டேன்’ என 22.3 விழுக்காட்டினரும், வழக்கம்போலவே பயணம் மேற்கொள்வேன் என 19.6 விழுக்காட்டினரும் பதிலளித்துள்ளனர்.
பயணத்தின்போது முகக்கவசம், தனிமனித இடைவெளி, கிருமி நாசினி பயன்படுத்துதல் ஆகியவை குறித்த கேள்விக்கு 91.8 விழுக்காட்டினர் கடைபிடிப்பதாக தெரிவித்துள்ளனர். கரோனா தாக்கத்தைப் பொறுத்து, ரயில்வே பயணிகளுக்காக வெளியிடும் விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைபிடிப்பேன் என 95.2 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். கரோனா அறிகுறிகளுடன் சக பயணி இருந்தால், உடனடியாக 'ரயில்வே அதிகாரிகளுக்கும் காவல் துறையினருக்கும் தெரிவிப்பேன்' என 92.6 விழுக்காடு பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
'பயணம் செய்யும் நேரத்தில் கரோனா அறிகுறி, தங்களுக்கு இருப்பதாகத் தெரிந்தால் உடனடியாக ரயில்வே அதிகாரிகளை அணுகுவேன்' என்று 68.8 விழுக்காடு பேர் கூறியுள்ளனர். முன்பயணப்பதிவில் பற்றாக்குறை நிலவினால், அதிமுக்கியத் தேவையென்றால் மட்டுமே முன்பதிவு செய்வேன் என 71.1 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். கூட்டமாகப் பயணம் செய்ய நேர்ந்தால், '60.9 விழுக்காடு பேர் பயணிக்க மாட்டோம்' என கருத்துத் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள சூழலில் ரயில் பயணம் பாதுகாப்பானதா என்ற கேள்விக்கு 48.9 விழுக்காடு பேர் பாதுகாப்பற்றது எனக் கூறியுள்ளனர். இக்கருத்துக்கணிப்பில் கூடுதலாக ஊரடங்கு நீட்டிப்பது கட்டாயம் எனும்போது ரயில்சேவைகளுக்கும் இது பொருந்தும். மேலும் இரண்டு மாதங்களுக்கு ரயில் சேவை இல்லாமல் இருப்பது நல்லது. முன்பதிவு ரயில்களை மட்டும் சில காலங்களுக்கு இயக்கலாம்.
ஊருக்குச் செல்ல முடியாமல் பலர் தவிக்கும் நிலையில், பாதுகாப்பு நிபந்தனைகளோடு ரயில் சேவையைத் தொடங்கலாம் என்றும்; பல்வேறு கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த கருத்துக் கணிப்பினை மேற்கொண்டுள்ள ராஜபாளையம் ரயில் பயனாளர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹரிசங்கர், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு தொலைபேசியில் அளித்த நேர்காணலில், 'பார்சல் சேவைகள் நடைபெற்று வரும் நிலையில், பயணிகளுக்கான ரயில் சேவைகள் குறித்து பொதுமக்களிடம் உள்ள கருத்துகளை அறிய விரும்பினோம்.
பல்வேறு தரப்பட்ட நபர்களிடம் ஆன்லைன் மூலமாக இக்கருத்துக் கணிப்பு நடைபெற்றது. பயணிகள் ரயில் சேவை வேண்டும் அல்லது வேண்டாம் என்பதில் சரிசமமான கருத்துகளே பதிவாகியுள்ளன.
இந்தக் கருத்துக் கணிப்பின் தொகுப்பை தென்னக ரயில்வே அதிகாரிகளுக்கும், மத்திய ரயில்வே துறைக்கும் அனுப்பியுள்ளோம். ரயில் சேவை குறித்து பொதுமக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து முடிவுகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்தக் கருத்துக் கணிப்பு அமைந்துள்ளது' என்றார்.
இதையும் படிங்க...’வீடுகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்ற வேண்டும்’- ராதாகிருஷ்ணன்