மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா வளாகத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான பாதுகாப்பு மற்றும் விபத்தில்லா பயணம் குறித்த காவல்துறையினரின் ஆலோசனை முகாம் நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதன கலா ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
அதில், ஆட்டோ ஓட்டுநர்கள் மது அருந்தி மற்றும் போதை பொருட்கள் உபயோகித்து வாகனம் ஓட்டக் கூடாது. போதையில் வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்படுவதுடன் உயிரிழப்பு ஏற்படுகிறது. பயணிகளின் தவறவிட்ட உடமைகளை அவர்களிடம் ஒப்படைக்கவும். போக்குவரத்துத் துறை அலுவலர்களின் வழிகாட்டுதல்படி பயணிகளை ஏற்றிச் செல்லவும்.
அதிகமான பயணிகளை ஏற்றவோ, அதிவேகமாக வாகனங்களை ஓட்டவோ கூடாது. ஓட்டுனர்கள் சீருடை அணிந்து சாலை விதிமுறைகளை மதித்து பாதுகாப்பாக, விபத்தில்லா பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். இதில்,நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.