தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலையடுத்து நாளை மறைமுகத் தேர்தல்கள் மதுரை மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்ததுபடி நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட ஊராட்சித் தலைவர் ஊராட்சி, ஒன்றியத் தலைவர், கிராம ஊராட்சி/ஊராட்சி ஒன்றிய, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல்கள் நாளை நடைபெற உள்ளன.
மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல்கள் காலை 11 மணி அளவிலும்; மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் தேர்தல்கள் பிற்பகல் 3.30 மணி அளவிலும் நடைபெறவிருக்கிறது.
மேற்காணும் விபரப்படி நடைபெறவுள்ள மூன்று அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் நடைபெறும். இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி தொடர்பான தேர்தல்கள் 'மாவட்ட ஆட்சித்தலைவர்' தலைமையிலும், ஊராட்சி ஒன்றிய அளவிலான தேர்தல்கள் 'ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள்' தலைமையிலும், கிராம ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல்கள் ஒவ்வொரு ஊராட்சிக்கும் நியமிக்கப்பட்டுள்ள 'உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்’ தலைமையிலும் நடைபெற உள்ளன.
மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய அளவில் நடைபெறும் மறைமுகத் தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தையும் வீடியோ கேமரா மூலம் தொடர்ச்சியாகப் பதிவு செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று கிராம ஊராட்சிகளை பொறுத்தமட்டில் பதற்றம் உள்ள ஊராட்சிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள 244 ஊராட்சிகளிலும் வீடியோ கேமரா பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இவை தவிர ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, இருப்பதுடன் பாதுகாப்பு வழங்குவதற்காக இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 10 துணைக் கண்காணிப்பாளர்கள், 36 ஆய்வாளர்கள் மற்றும் 1,100 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: மறைமுக தேர்தலில் அதிமுக வேட்பாளர் வாக்களிக்கத் தடை