கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து சுங்கச் சாவடிகளும் மூடப்பட்டன.
இதனையடுத்து ஊரடங்கில் சில தளர்வு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் ஒருபகுதியாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 20ஆம் தேதியிலிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் மதுரையில் அமைந்துள்ள கப்பலூர், எலியார்பத்தி ஆகிய சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு 12 மணிமுதல் சுங்க கட்டண வசூல் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் மாற்றியமைக்கப்பட்ட கூடுதல் கட்டணமாக மிதவை வாகனங்களுக்கு ஐந்து ரூபாயும், கனரக வாகனங்களுக்கு 10 ரூபாய் வீதம் சுங்கக் கட்டணத்தை உயர்த்தியும் வசூல் செய்யப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்தியாவசிய பொருள்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுங்கச் சாவடியில் வாகன போக்குவரத்தும் குறைவாகவே காணப்படுகிறது.
சுங்கச் சாவடி ஊழியர்கள் முறையாக சமூக இடைவெளியை பின்பற்றவும், கைகளை நன்கு கழுவவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் மதுரை மாநகராட்சி சார்பில் அமைந்துள்ள மஸ்தான் பட்டி, சிந்தாமணி, வலையங்குளம் சுங்கச் சாவடி மையங்களில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பார்க்க: கோவிட்-19 தாக்கம்: ஸ்விகி, சொமாட்டோ டெலிவரிக்குத் தடை!