மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டார். பின்னர் மேடையில் பேசிய அவர், "ஊழலின் ஊற்றுக்கண்ணாக திமுக செயல்படுகிறது.
திராவிட இயக்க வரலாற்றில் தலைவர்கள் அனைவரும் மக்கள் சேவை செய்துதான் மக்களின் மனதை வென்றனர். ஆனால், திமுகவினர், புதிதாக ஒரு கொரியர் சேவை ஒன்றை தொடங்கியுள்ளனர். எந்த இடத்தில் தவறுகள் நடந்தாலும் அதனை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக கொடுப்பார்களாம். இது எவ்வளவு பெரிய சேவையாக உள்ளது. உலகத்தில் யாரும் செய்யமுடியாத இந்த கொரியர் சேவையை திமுக புதிதாக ஆரம்பித்துள்ளது. எந்த அரசியல்வாதியாவது எனக்கு அறிவே இல்லை, அரசியல் ஞானம் இல்லை, இதனை சொல்வதற்கு பிரசாந்த் கிஷோர் என்பவரை நியமித்துள்ளேன் என்று வெளிப்படையாக கூறுவதை பார்த்துள்ளீர்களா?
பிரஷாந்த் கிஷோரை நியமித்தால் என்ன அர்த்தம். எனக்கு மூளையே இல்லை பிரசாந்த் கிஷோரின் மூளையில் என்ன இருக்கிறதோ அதனையே நான் செய்வேன் என்று சொன்னால் பின்பு நீங்கள் எதற்கு, பிரசாந்த் கிஷோரையே திமுகவின் தலைவராக நியமித்துவிட வேண்டியதுதானே" என கடுமையாக தாக்கி பேசினார்.
இதன்பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "29 மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கை அமைகிறது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் மற்றவர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனை மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவார். ஒவ்வொரு தளர்வுகளுக்குமான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்" என்றார்.
இதையும் படிங்க: குடிசைப்பகுதி மக்கள் தனிமைப்படுத்தும் முகாமில் தங்கினால் ஆயிரம் ரூபாய் நிவாரணம்!