மதுரை: தமிழ்நாட்டின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021 வரை 8 ஆண்டுகள் சுகாதார அமைச்சராக பணியாற்றியுள்ளேன். பொதுமக்கள் மத்தியில் எனக்கு நற்பெயர் உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை, கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில் என் மீது கூறப்பட்டிருக்கும் கருத்துகள் எவ்வித சட்ட அடிப்படையும் இல்லாமல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாட்சியாக என்னை அழைத்த விசாரணை ஆணையம், என் மீது குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் என் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகளை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். ஆணையத்தின் அறிக்கையில் எனது பெயரை பயன்படுத்தி குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனுவை நேற்று (பிப்.28) விசாரித்த நீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளைப் பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து இந்த தடையை நீக்கக் கோரி, அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், "ஆறுமுகசாமி ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையின் மீது சட்ட நடவடிக்கை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. எனவே இந்த வழக்கு, விசாரணைக்கு உகந்ததல்ல. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, பொதுவெளியில் வெளியிடப்பட்டு 6 மாதங்கள் ஆகிவிட்டன. இது விஜயபாஸ்கரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்பது ஏற்கத்தக்கதல்ல. இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும்" என வாதாடப்பட்டது.
வாதங்கள் நிறைவுக்கு பின், உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு வழக்குகளை சுட்டிக்காட்டி, இடைக்காலத் தடையை ரத்து செய்ய நீதிபதி மறுப்பு தெரிவித்தார். "ஆறுமுகசாமி ஆணையத்தை, வழக்கின் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிடுகிறேன். ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் விஜயபாஸ்கர் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கூடாது. வேறு குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நீதிமன்றம் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. அடுத்தகட்ட விசாரணை மார்ச் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" எனக் கூறினார்.