தூத்துக்குடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் உள்ள கோயில்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையிலும், கோயில் சொத்துக்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் முறையான நடவடிக்கை எடுப்பது அவசியம். ஆகவே தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடங்களை நிரப்பவும் அவர்களுக்கு முறையான ஊதியத்தை நிர்ணயம் செய்யவும், அந்தந்த மண்டல இணை ஆணையர், உதவி ஆணையர், செயல் அலுவலர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும். அதோடு, திருட்டு சம்பவங்கள் குறித்து முறையாக விசாரிக்காத காவல் துறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் இதுகுறித்து இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உரிய பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.