மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு அரசாணையை பிறப்பித்தது. இதில், லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வுக்குழுவினரே தேர்வு செய்வர்.
அந்த வகையில் முதலமைச்சர், சபாநாயகர், எதிர்கட்சித் தலைவர் ஆகியோரே லோக் ஆயுக்தா தேர்வுக்குழுவாக செயல்படுவர். ஆனால் கடந்த 2018 டிசம்பரில் தமிழக லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்களை தேர்வு செய்கையில் எதிர்கட்சித் தலைவர் பங்கேற்கவில்லை.
தேர்வுக்குழு உறுப்பினர்களில் மூவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென்ற நிலையில், எதிர்கட்சித்தலைவரின் பங்கேற்பின்றி லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதோடு, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இது செல்லாது.
ஆகையால், லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனம் தொடர்பான அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு,
லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களை எதிர்மனுதாரராக சேர்க்குமாறு மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கை ஜூன் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.