மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியுள்ளது. இதில் தென்காசி தனி தொகுதியாகும். தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை கனிமொழி, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தூத்துக்குடி தொகுதியிலும், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியிலும், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியிலும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் தேனி தொகுதியிலும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் சிவகங்கை தொகுதியிலும் நடிகர் மன்சூர் அலிகான் திண்டுக்கல் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்
மதுரை மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை மதுரை மத்தி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மற்றும் வேலூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது .
ஆண் வாக்காளர்கள் இரண்டு லட்சத்து 70 ஆயிரம் பேர், பெண் வாக்காளர்கள் ஆறு லட்சத்து 50 ஆயிரம் பேர் என மொத்தம் 15 லட்சத்து 38 ஆயிரத்து 133 பேர் தங்களது வாக்குகளை செலுத்துகின்றனர். இவர்களில் 70 பேர் திருநங்கைகள் ஆவர். மதுரை தொகுதி தேர்தல் ஆணையத்தால் 163 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மதுரை முழுவதும் 517 வாக்குச்சாவடிகளில் 1549 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 444 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும் இரண்டு வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன. பதற்றமான அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
வாக்குப்பதிவுகளை கண்காணிக்கும் வகையில் 962 வெப் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2500க்கும் மேற்பட்ட அயல் மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வயதானவர்கள் வாக்களிக்க தேவையான உதவிகள் செய்ய 1600 தன்னார்வத் தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாசி வீதிகளில் உள்ள 18 வாக்குச்சாவடிகளில் 51 வாக்குப்பதிவு மையங்களும், அழகர் எதிர்சேவை பகுதிகளில் 15 இடங்களில் உள்ள 53 வாக்குப்பதிவு மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் மக்கள் அதிகமாக கூடும் முக்கிய இடங்களில் போதுமான மருத்துவக் குழுக்கள் உள்ளன. அதேபோன்று 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களும் போதுமான அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இன்று மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர் ஆகையால் அவர்கள் அனைவரும் வாக்களிக்கும் வசதியை கருத்தில்கொண்டு தேர்தல் ஆணையம் கூடுதலாக இரண்டு மணி நேரத்தை வழங்கியுள்ளது. இதனால் இன்று இரவு எட்டு மணி வரை மதுரை தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறும்.