சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, திருச்சி கொட்டப்பட்டில் உள்ள அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டு உள்ள ஜெயக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "நான் குற்றமற்றவன் என்ற போதிலும், அரசியல் காரணங்களுக்காகக் கடந்த 1991 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதியன்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 வருடங்கள் மிகுந்த வேதனையுடன் சிறைவாசம் அனுபவித்த பின்பு கடந்த 11.11.2022 அன்று உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டேன்.
நான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், என்னைத் திருச்சியில் உள்ள கொட்டப்பட்டு, இலங்கை அகதிகள் முகாமில் கடந்த 12.11.2022 அன்று முதல் காவலில் வைத்து உள்ளனர். இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளேன். இங்கு இருப்பது சிறையை விட மோசமானது. எங்கள் அறையை விட்டு வெளியே வரவும், கைதிகளுடன் பழகவும், எனக்கு அனுமதி இல்லை. இதே அவலநிலை தொடர்ந்தால் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
என்னை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது மரண தண்டனைக்கு ஒப்பானது. நான் இலங்கை செல்ல விரும்பவில்லை. தன்னை அகதிகள் முகாமிலிருந்து விடுவித்து, சென்னையில் உள்ள தனது குடும்பத்தினருடன் வாழ அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையில், ஜெயக்குமார் குடும்பத்தினருடன் வசிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீதான தமிழக அரசின் முடிவு என்ன? சென்னை வியாசர்பாடியில் குடும்பத்தினர் உள்ள வீட்டிலேயே ஜெயக்குமாரைக் காவலில் வைக்கலாமே? முகாம் காவலைச் சென்னைக்கு மாற்ற முடியாதா, சென்னையில் குறிப்பிட்ட காவல் நிலைய எல்லைக்குள் நடமாட அனுமதிக்கலாமா? என பல்வேறு கேள்விகளை நீதிபதி எழுப்பினார்.
அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயக்குமாரைச் சென்னையில் உள்ள குடும்பத்தினருடன் தங்க வைக்க அனுமதிக்க முடியாது. இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வந்ததால் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சிறப்பு முகாமை வேறு இடத்திற்கு மாற்ற இயலாது. இலங்கையிலிருந்து வந்தவர் என்பதால் மத்திய அரசும் முடிவெடுக்க வேண்டும். எனவே ஜெயக்குமாரை குடும்பத்தினருடன் தங்க அனுமதி அளிக்க இயலாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப்பதிவு செய்த நீதிபதி, தீர்ப்பாக வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை..!