மதுரை: மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது, “திருநங்கைகள் உள்ளிட்ட இதர மாற்று பாலினத்தவரின் உரிமைகளைப் பாதுகாக்கும் விதமாக உச்ச நீதிமன்றம் கடந்த 2014-இல் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கி செயல்படுத்துமாறு உத்தரவிட்டது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, உரிய மருத்துவ வசதி, தனி கழிப்பறை உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை அளித்தது. இவற்றை மத்திய மற்றும் மாநில அரசுகள் 6 மாதத்திற்குள் செயல்படுத்த வேண்டுமென கூறியிருந்தது.
ஆனால் எந்த அரசுகளும் இதனை கடைபிடிக்கவில்லை. எனவே உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு முறையாக அமல்படுத்தியுள்ளது. திருநங்கைகள் உள்ளிட்ட மாற்று பாலினத்தவருக்கு தனியாக நல வாரியம் அமைக்கப்பட்டு, தனி அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இதனை வழங்குவதற்கு கலெக்டர்கள் தலைமையில் குழு உள்ளது. இவர்களது நலனுக்காக ஆண்டுக்கு 1 கோடிக்கும் அதிகமாக அரசு செலவிட்டு வருகிறது. ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, வீட்டு மனை பட்டா, வங்கிக் கடன் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உள்ளது.
காவல்துறை, மருத்துவர், அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர் உள்ளிட்ட அரசுப் பணிகளும் வழங்கப்பட்டுள்ளன. கழிப்பறை வசதி, அறுவை சிகிச்சை வசதி உள்ளிட்டவை உள்ளன. 40 வயதை கடந்தவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இவர்களுக்கென தனி மொபைல் ஆப் பயன்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் சிறந்த திருநங்கை விருது வழங்கப்படுகிறது” என அதில் கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற உத்தரவுகளை முறையாக செயல்படுத்தி வருவதால், இந்த வழக்கில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் அமைக்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்த மதுப்பிரியர்கள்.. ராணிப்பேட்டையில் நடந்த விநோதம்!