மதுரை: டெல்லியைச் சேர்ந்தவர், அமித் மாள்வியா(46). பாரதிய ஜனதா கட்சியில் ஐடி பிரிவு தலைவராக உள்ளார். இவர் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சை அவதூறு ஏற்படுத்தும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக திருச்சி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், அமித் மாள்வியா மீது கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமித் மாள்வியா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “மனுதாரர் மீது தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அரசியல் காரணங்களுக்காக வேண்டுமென்றேதான் திரித்து பதிவிட்டுள்ளார். வழக்கு விசாரணை நடந்து வருகிறது. எனவே, அவர் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது” என கூறப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை வருகிற அக்டோபர் 31ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சனாதன விவகாரம் குறித்த அமித் மாள்வியா மீதான வழக்கு; காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு!