லோக் ஆயுக்தா தேர்வு குழுவின் தலைவர் மற்றும் தேர்வுக் குழுவின் உறுப்பினர்கள் சார்பாக, தமிழ்நாடு அரசின் பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை துணை செயலாளர் கண்ணன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த. பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிப்பதற்கு தேர்வு குழு உள்ளது. அந்தக் குழு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் உள்ளது. அதில் சபாநாயகரும், எதிர்க்கட்சித் தலைவரும் உறுப்பினராக இடம்பெறுவர்.
இந்தத் தேர்வுக்குழுதான் லோக்ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும்.
இதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் தேடுதல் குழு நியமிக்கப்பட்டது. அவர்கள் தேசிய அளவில் நாளிதழில் விளம்பரம் செய்தனர்.
விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, அதன் பின்பு தகுதியானவர்களின் பட்டியலைத் தேடுதல் குழு, தேர்வு குழுவிடம் சமர்ப்பித்தது.
அதன் அடிப்படையில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்ய, தேர்வுக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த தேர்வுக் குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்க இயலாது எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தேர்வு குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். எனவே உரிய விதிமுறைப்படி தேர்வு நடந்துள்ளது.
இதைத்தொடர்ந்து லோக் ஆயுக்தா உறுப்பினர்கள், தலைவர் உரிய விதிமுறைப்படி தேர்வு செய்யப்படவில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், லோக் ஆயுக்தா உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்ட 2 பேருக்கு இடைக்கால தடை விதித்தனர்.
இந்த தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களின் இடைக்காலத் தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனவே லோக் ஆயுக்தா குழுவின் தலைவர் தேவதாஸ் மற்றும் நீதி பணிகள் சாராத உறுப்பினர்கள் தேர்வு விதி முறைப்படி தான் நடந்துள்ளது. எந்த விதி மீறலும் இல்லை என்று தெளிவாகிறது .
எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.