மதுரை: இராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத தாக்கல் செய்து இருந்தார். அதில், "தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து விதமான அலுவலகங்கள் மற்றும் கடைகளில் தூய தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என 1987 மற்றும் 1990 ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் அரசாணை படி, 5:3:2: என்ற விகிதத்தில் தூய தமிழ், ஆங்கிலம், பிற மொழியில் எழுதப்பட்ட பெயர் பலகைகள் தான் கடைகளுக்கு முன் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணையில் உள்ளது. ஸ்டோர்ஸ், பேக்கரி, மெடிக்கல் ஷாப், சில்க்ஸ், ஓட்டல் என ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுதி உள்ளனர்.
இவைகளை மாற்றி அங்காடி, அடுமணை, மருந்து கடை, பட்டு மாளிகை, உணவகம் என தூய தமிழில் பெயர் வைக்க வேண்டும். ஆனால் அவை ஆங்கில வார்த்தைகளை தமிழில் மொழி பெயர்த்து எழுதி உள்ளனர். எனவே, தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்திலும் தமிழக அரசின் அரசாணை படி, 5:3:2: என்ற விகிதத்தில் தூய தமிழில் கடையின் பெயர் பலகை எழுதி வைக்க உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் மற்றும் ஜி.ஆர் சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதுவரை தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை என்றால் 50 ரூபாய் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது எனவும், இனிமேல் தமிழில் பெயர் இல்லை என்றால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அரசாணை தயாரிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் அது அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இதுவரை தமிழில் பெயர் பலகை வைக்காத எத்தனை நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், அரசாணையை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டு துறை செயலாளர் பதிலளிக்கவும், அரசு தரப்பில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:ஆதித்யா எல் 1-ல் இப்படி ஒரு வசதியா.? விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு.!