மதுரை: திருநெல்வேலி கால்வாய் மற்றும் பாளையம் கால்வாய் முழுவதும் உள்ள திடக்கழிவு, மனித கழிவுகளை போர்க்கால அடிப்படையில் சுத்தப்படுத்திக் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், கால்வாய்களில் கொட்டப்பட்டு உள்ள குப்பைகளை அகற்றி கால்வாய்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு.
திருநெல்வேலி சங்கர் நகரைச் சேர்ந்த எஸ்.பி. முத்து ராமன், உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "திருநெல்வேலி கால்வாய் மற்றும் பாளையம் கால்வாய் என்ற இரு கால்வாய்கள் உள்ளன. தாமிரபரணி ஆற்று நீர் இந்த கால்வாய் வழியாகத் தான் சென்று அப்பகுதியிலுள்ள மக்களுக்குப் பயனளிக்கின்றன. இந்த கால்வாய் வழியாகத் தாமிரபரணி ஆற்று நீர் செல்கிறது. இதன் மூலம் அப்பகுதியிலுள்ள விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ளது.
ஆனால் திருநெல்வேலி கால்வாய் மற்றும் பாளையம் கால்வாய் முழுவதும் தற்போது மனித கழிவுகள், திடக்கழிவுகள் அதிக அளவில் உள்ளன. குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர்களும் திருநெல்வேலி மற்றும் பாளையம் கால்வாய்களில் கலந்து வருகிறது. திருநெல்வேலி மற்றும் பாளையம் கால்வாயில் உள்ள கழிவுகளைச் சுத்தம் செய்யக் கோரி பல முறை மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறையினுக்குக் கடிதம் அனுப்பியும் பல ஆண்டுகளாக இந்த கால்வாய்கள் சுத்தம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தற்போது திருநெல்வேலி மற்றும் பாளையம் கால்வாய்கள் மாநகராட்சியின் குப்பை தொட்டியாக மாறிவிட்டன.
இதையும் படிங்க: B.E., B.Tech 3-ஆம் சுற்று தற்காலிக இடம் ஒதுக்கீடு.. காலி இடங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
இந்த திருநெல்வேலி மற்றும் பாளையம் கால்வாய்களில் மனித கழிவுகள் உட்பட அனைத்து வகையான திடக்கழிவுகளும் நேரடியாகக் கலப்பதைத் தடுத்து இரண்டு கால்வாய்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கவும், இரண்டு கால்வாய்களையும் போர்க்கால அடிப்படையில் சுத்தப்படுத்திக் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த பொதுநல வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், திருநெல்வேலி மற்றும் பாளையம் கால்வாயில் உள்ள குப்பைகளை அகற்றி, கால்வாய்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நெல்லை மாநகராட்சி ஆணையர் விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஆணையத்தின் உத்தரவு பின்பற்றப்பட்டதா? காவிரி நீர் மேலாண்மை வாரியம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு