மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 1980-1983ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது பழைய கால நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். இக்கல்லூரியில் பயின்று தற்போது அரசுத்துறைகளில் பணிபுரிந்து வரும் காவல் அலுவலர்கள், தொழிலதிபர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் முன்னாள் மாணவரும் திமுக மக்களவை உறுப்பினருமான தமிழச்சி தங்கப்பாண்டியன் தன்னுடன் படித்த நண்பர்களை காண தியாகராசர் கல்லூரி வந்திருந்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், "தியாகராசர் கலைக்கல்லூரியின் முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கல்லூரி காலம் தான் இலக்கிய வாசிப்பை ஊக்கப்படுத்தியது. பல துறைகளில் சாதிக்க தூண்டியதும் கல்லூரி காலம் தான். கல்லூரிக் காலத்தில் எழுத்தாளராக வருவேன் என்று நினைத்தேன்.
அரசியல்வாதியாக வருவேன் என்ற எண்ணம் இல்லை. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பதவியில் இருக்கிறோம் என்பதை மறந்து ஒரு மாணவியாக தான் தற்போது உணர்கிறேன். சாதி, மத பேதங்களை கடந்து இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டோம். சபரிமலை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து கூற முடியாது.
மதரீதியாக அனைத்து தரப்பினரின் கருத்தை புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.