மதுரை: தூத்துக்குடி, விளாத்திகுளம், கன்னிமார் கோட்டம் பகுதியைச் சேர்ந்த முத்துமாரி அம்மாள் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண். எனது கணவர் 2014ஆம் ஆண்டில் காலமானார். தூத்துக்குடி, விளாத்திகுளம் பகுதியில் 17 கிராம உதவியாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் சூரன்குடி கிராம உதவியாளர் பதவி பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களுக்காக SC(W) ஒதுக்கப்பட்டது.
ஆனால், MBC வகுப்பைச் சேர்ந்த அருண்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், சூரன்குடி கிராமத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கிறேன். ஆனால், தேர்வு செய்யப்பட்டவர் 35 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கிறார். கிராம உதவியாளர் பணிக்கு உள்ளூர் கிராம மக்களைத் தேர்வு செய்யப்பட வேண்டும் என விதி உள்ளது. ஆனால், சட்டவிரோதமாக கிராம உதவியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து விளாத்திகுளம் தாசில்தாரிடம் புகார் அளித்தேன். ஆனால், மீண்டும் ரோகினி என்பவரை கிராம உதவியாளர் பணிக்கு நியமித்துள்ளார். அவர், 33 கிலோ மீட்டர் தொலைவில் வசித்து வருகிறார். இதுவும் சட்டவிரோதம். எனவே, விதிமுறைகளுக்கு புறம்பாக தேர்வு செய்யப்பட்டவர்களை ரத்து செய்து சட்டத்திற்கு உட்பட்டு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், சூரன்குடி கிராம உதவியாளராக என்னைத் தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, விளாத்திகுளம் பகுதியில் கிராம உதவியாளர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்களா என்பதை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிக்கையாக தாக்கல் செய்யவும், விதிமுறை மீறல் நடைபெற்றிருந்தால் நியமனங்கள் ரத்து செய்ய நேரிடும் என எச்சரித்து வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஏடிஎம் மையங்களில் நூதன திருட்டு - கூண்டோடு சிக்கிய கொள்ளையர்!