தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராஜ் ஞானபால் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில் “நாங்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காமராஜ் மார்க்கெட்டில் காய்கறி கடைகள் வைத்துள்ளோம். தற்பொழுது கரோனா தொற்று காரணமாக கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இதனால் இந்த இடத்தில் வியாபாரம் செய்துவந்த 34 கடைகாரர்கள் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இதையடுத்து, எங்களுக்கு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகள் எட்டுக்கு எட்டு என்ற குறைவான அளவிலும் பாதுகாப்பற்ற முறையிலும் வழங்கப்பட்டுள்ளது. இங்கு மின் வசதியும் இல்லை. அதுமட்டுமின்றி, அதிகாலை நான்கு மணி முதல் 10 மணிவரை மட்டுமே வியாபாரம் இருக்கும். ஆனால், போதிய வசதிகள் இல்லாததால் எங்கள் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பழைய இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கடைகளுக்கு 120 ரூபாய் வாடகையாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது, மாற்றப்பட்டுள்ள எந்த வசதிகளும் இல்லாத கடைக்கு 250 ரூபாய் வாடகையை உயர்த்தியுள்ளனர்.
கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாடகையை செலுத்த முடியாமல் சிரமப்படுகிறோம். எனவே இந்த வாடகையை, கரோனா நோய்த் தொற்று காலம் முடியும்வரை வசூலிக்கக் கூடாது. மேலும் பழைய பேருந்து நிலையம் அருகில் போதிய இடைவெளிகளுடன் வியாபாரம் செய்வதற்கு கடைகள் ஒதுக்கி தர வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.