ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் வளர்பிறை நாள்களில் நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்தாண்டு பங்குனி உத்திரத் திருவிழா வரும் மார்ச் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 11ஆம் தேதிவரை நடைபெறுவதாகக் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
விழாவில் முக்கிய நிகழ்வாக வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண வைபவம் அதனைத்தொடர்ந்து 10ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதால் நாடு முழுவதும் மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களான கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், பெரிய நிறுவனங்கள் அனைத்தையும் மூடுவதற்கு மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாகத் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு எட்டு கால பூஜை மட்டும் நடைபெற்றது.
இந்நிலையில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோயில் வளாகத்துக்குள்ளேயே திருவிழாவை நடத்த நிர்வாகம் முடிவுசெய்திருந்தது. கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து கோட்டாட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. 144 தடை உத்தரவால் மக்கள் அதிகளவில் கூட முடியாது என்பதால் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்ய முடிவுசெய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்தது, பங்குனி உத்திரத் திருவிழா ரத்துசெய்யப்படுவதாக கோயில் இணை ஆணையர் ராமசாமி அறிக்கை வெளியிட்டார். இந்த அறிவிப்பு பக்தர்களிடையே பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியது.