டெல்லியில் நடைபெற்ற சமய மாநாட்டில் கலந்துகொண்ட மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள ரோஜா தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 13,14,15 ஆகிய மூன்று வார்டுகளையும் தனிமைப்படுத்த மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதன்படி, அனைத்து பாதைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, அப்பகுதியில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து சுகாதார பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்கள் எக்காரணம் கொண்டும் வெளியில் வரவும், வெளியாள்கள் உள்ளே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருல்களை வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்குவதற்கும் நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, திருமங்கலம் நகர் பகுதி முழுவதையும் தனிமைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் உத்தரவின் பேரில் நகருக்கு வரும் ஆறு முக்கிய பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இதனால், அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளிடம் காவல் துறையினர் விவரம் கேட்டறிந்து பின்பு அனுமதிக்கின்றனர். மேலும் திருமங்கலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டும், சாலைகள் வெறிச்சோடியும் காணப்படுகின்றன.
இதையும் படிங்க:கீழக்கரையில் 426 பேருக்கு கரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன: ஆட்சியர் தகவல்!