மதுரை: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பூமியின் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர் கண்காணிப்பு ஆகிய பணிகளுக்காக பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ஆகிய ராக்கெட்டுகளில் செயற்கைக்கோள்களை அனுப்பி வருகிறது.
ஆனால் இவை அனைத்தும் டன் கணக்கிலான செயற்கைக்கோள்களை தாங்கி செல்லக்கூடிய ராக்கெட்டுகள் ஆகும். எனவே 500 கிலோ மற்றும் அதற்கு குறைவான எடை கொண்ட செயற்கைக்கோள்களை அனுப்புவதற்காக கடந்த ஆண்டு எஸ்எஸ்எல்வி 1 என்ற ராக்கெட்டை 2 செயற்கைக்கோள்கள் உடன் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
ஆனால், இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் நேற்று (பிப்.10) காலை 9.18 மணிக்கு எஸ்எஸ்எல்வி டி2 என்ற ராக்கெட், 3 செயற்கைக்கோள்களை சுமந்தபடி விண்ணில் ஏவப்பட்டது மட்டுமல்லாமல், வெற்றிகரமாகவும் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது.
இந்த ராக்கெட்டில் இஓஎஸ் - 07, ஜானஸ் - 1 மற்றும் ஆசாதி சாட் - 2 ஆகிய 3 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. இவற்றில் ஆசாதி சாட் - 2 செயற்கைக்கோள் தயாரிப்பு பணியில், சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் உள்ள பல்வேறு பள்ளிகளின் மாணவிகள் ஈடுபட்டிருந்தனர்.
அதில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 10 பேர் இணைந்து 50 கிராம் எடை கொண்ட பேலோடுவை வெற்றிகரமாக தயார் செய்து இஸ்ரோவுக்கு அனுப்பினர். தற்போது இந்த பேலோடும், ஆசாதி சாட்- 2இல் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
மேலும் சாதனை புரிந்த மாணவிகளுடன் பள்ளி தலைமையாசிரியர் கர்ணன் மற்றும் அறிவியல் ஆசிரியை சிந்தியா ஆகியோர் ஒருங்கிணைந்து இந்த பணியை செய்து முடித்தனர். இந்த நிலையில் சாதனை மாணவிகளை மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்டக் கல்வி அலுவலர் முரளி, பள்ளி பெற்றோர் ஆசிரியர்கள் கழகத் தலைவர் ஜெயராமன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ஸ்ரீதேவி சண்முகம், பள்ளி உதவித் தலைமையாசிரியைகள் வெங்கடேஸ்வரி மற்றும் ரெகுபதி ஆகியோர் பாராட்டினர்.
முன்னதாக திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசாதி சாட்-1 செயற்கைகோள் தயாரிப்பிலும் பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: SSLV D2: 3 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட்!