மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெரிய மறவன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மச்சக்காளை மகன் முத்துக்காளை(25). வீடு கட்டும் தொழிலாளர். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். ஊரடங்கு காலமென்பதால் வேலை இல்லாமல் இருந்த அவர், கிணறு மரப் பொந்துகளில் புறா பிடித்து விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 3) திருமங்கலம் அருகே தர்மத்துப்பட்டி பகுதியில் உள்ள கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், 70 அடி ஆழமுள்ள கிணற்றில் முத்துக்காளை கயிறு கட்டி புறா பிடிக்க இறங்கினார்.
அப்பொழுது 20 அடி ஆழத்தில் இறங்கியபோது கயிறு அறுந்தில் கிணற்றுக்குள் விழுந்தார். இதில் கை, கால், இடுப்பு முறிந்துவிட்டது. முத்துக்காளை அலறல் சத்தம் கேட்டு அருகேயுள்ள தோட்டத்தில் வேலை பார்த்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். கிணற்றில் படிக்கட்டு இல்லாததால் உயிருக்குப் போராடி கொண்டிருந்த முத்துக்காளையை மீட்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் திருமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதனடிப்படையில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு முத்துக்காளை உயிருடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பெண்ணின் தங்க நகை பறிக்க முயன்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!